புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் தென்காசி தொகுதியில் வெற்றிச் அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக புதன்கிழமை அறிவித்தார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (27.03.2024) நிறைவடைந்தது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில், அ.தி.மு.க கூடடணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி-க்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, டாக்டர் கிருஷ்ணாசாமி தென்காசி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “இன்று தென்காசி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தேன்.
அப்போது அஇஅதிமுக முன்னாள் அமைச்சர்கள் திரு கே.டி ராஜேந்திர பாலாஜி, வி.எம். ராஜலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி, அதிமுக தென்காசி மாவட்டச் செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் தேமுதிக, எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.” என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமி, தனிச் சின்னத்தில் போட்டியிடுவாரா அல்லது கூட்டணி கட்சியான அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவாரா என்று கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் தென்காசி தொகுதியில் வெற்றிச் அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக புதன்கிழமை அறிவித்தார்.
இது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: “அஇஅதிமுக கூட்டணி சார்பில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிச் சின்னமான இரட்டை இலையில் போட்டியிடுகிறேன்.” என்று அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“