Advertisment

தேர்தல் வாக்குறுதி... தேதி போட்டாங்களா..! ட்விட்டரில் வறுபடும் பிடிஆர் கமெண்ட்!

Tamilnadu Finance minister PTR comment about petrol diesel price trolls in social media: பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க முடியாது என்று தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

author-image
WebDesk
New Update
தேர்தல் வாக்குறுதி... தேதி போட்டாங்களா..! ட்விட்டரில் வறுபடும் பிடிஆர் கமெண்ட்!

பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க முடியாது என்று தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியை தவறுகிறதா என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisment

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதியமைச்சர், பிடிஆர், 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, பெட்ரோல் ஒரு லிட்டருக்கான வரியை 10 ரூபாய் 39 பைசாவில் இருந்து 32 ரூபாய் 90 பைசா என 3 மடங்குக்கு மேல் வரியை உயர்த்தியிருக்கிறார்கள். இதனால் மாநில அரசு வரி குறைப்பதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.10.39 ஆக இருந்தபோதே, கிட்டத்தட்ட 40 முதல் 45 சதவீதம் மாநிலங்களுக்கு பகிரக்கூடிய நிதி அளவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இப்போது முழு வரித் தொகையையும் மத்திய அரசே முழுமையாக எடுத்து கொள்கிறது.

2019-20 ஆம் ஆண்டில் மத்திய அரசு கையாண்ட பெட்ரோல்-டீசல் மீதான வரி ரூ.2.40 லட்சம் கோடி, அது 2020-21ஆம் ஆண்டில் ரூ.3.90 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது 63 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய ரூ.336 கோடி குறைந்திருக்கிறது. பெட்ரோல் பங்குகளில் விலை மற்றும் வரி அதிகரித்தபோதும், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய பங்குகள் குறைந்துள்ளன.

கச்சா எண்ணெய் பேரலுக்கு 112 டாலராக இருந்த போது பெட்ரோல்  லிட்டருக்கு ரூ.69 தான். இதில் மாநிலத்தின் வருமானம் ரூ.14.47. தற்போது ஆனால் இன்று கச்சா எண்ணெய் விலை 40 டாலராக உள்ளபோது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98. இதில் தமிழக அரசின் பங்கு ரூ.23. மீதமுள்ள தொகை உற்பத்தியாளர்கள் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு சேர்கிறது.

டீசலுக்கு தமிழக அரசின் வரி ரூ.17 தான். மீதமுள்ள ரூ.72, மத்திய அரசு மற்றும் உற்பத்தியாளர்களுக்கு செல்கிறது. 2011-ம் ஆண்டு 112 டாலராக கச்சா எண்ணெய் பேரல் விலை இருந்தபோது, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.43.99 தான். இன்று 44 டாலருக்கு கச்சா எண்ணெய் இருக்கும்போது, டீசல் விலை ரூ.92. மற்ற மாநில அரசுகளை ஒப்பிடும்போது, தமிழக அரசு குறைவாகத்தான் பெட்ரோல்-டீசலில் இருந்து வரி எடுக்கிறது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், மேற்கு வங்காளம், அருணாசலபிரதேசம், மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்கள் மத்திய அரசுக்கு ரூ.1 கொடுத்தார்கள் என்றால், ரூ.10 வரை வரியை திருப்பி வாங்குகிறார்கள். தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்தும் வராது, இங்கேயும் விலை உயர்த்தக்கூடாது என்றால் எப்படி அரசை நடத்துவது?

பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது, செஸ் வரி மொத்த வரி வருமானத்தில் வெறும் 12 சதவீதமாகவே இருந்தது. மீதமுள்ள 88 சதவீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்றைக்கு எல்லாமே செஸ் வரி என போட்டு, கிட்டத்தட்ட 3 மடங்காக உயர்த்தி இருக்கிறார்கள். பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய தொகையையும் வெகுவாக குறைத்துவிட்டார்கள். இதனால் தான் எங்களால் பெட்ரோல்-டீசல் விலையை உடனடியாக குறைக்க முடியவில்லை. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியாது என நிதி அமைச்சர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வலியுறுத்திய திமுக, ஆட்சியமைத்ததும் அப்படியெல்லாம் கொண்டுவர முடியாது என்கிறார் நிதி அமைச்சர் பிடிஆர்.

பெட்ரோல் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது குறையுங்கள் என்றால், அதிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வரி குறைவு தான் அதையும் குறைத்தால் ஆட்சி நடத்துவது எப்படி என்று கேள்வி கேட்கிறார். மேலும் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெட்ரோல் டீசல் விலையை 5 ரூபாய் குறைப்பதாக திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தோம். ஆனால் எப்போது குறைப்போம் என்று தேதி கொடுத்து இருந்தோமா என கேட்கிறார் அமைச்சர். இதற்கு டுவிட்டரில் ஒருவர் இது ஆரம்பம் மட்டும் தான் என பதிவிட்டு, தேதி போட்டாங்களா என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கியுள்ளார்.

ஆனால் தேர்தல் அறிக்கை வெளியிடும்போது, திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்து வாக்குறுதிகளும் நன்கு ஆராய்ந்து பின் தான் வெளியிட்டிருக்கிறோம், நிச்சயம் செயல்படுத்துவோம் என்றார். ஆனால் இப்போது மத்திய அரசு அதிக வரியை எடுத்துக்கொள்கிறது, மேலும் அவர்கள் தர வேண்டிய வரித் தொகைகள் பாக்கி இருக்கிறது. இன்னும் ரெண்டு வாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம் என்கிறார் அமைச்சர் பிடிஆர்.

நிதி அமைச்சர் பிடிஆர் சொல்லும் காரணங்களில் நியாயங்கள் இருந்தாலும், பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க அரசு மாற்றுத் திட்டங்களை வைத்திருக்க வேண்டுமல்லவா? சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இந்த விஷயத்தில் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Petrol Diesel Rate Ptrp Thiyagarajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment