ஆளுனர் மாளிகை செலவுகளுக்கு ரூ. 16.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இனி அரசு ஒதுக்கும் நிதியை ஆளுனர் மாளிகை இப்படித் தான் செலவு செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்மைச்சர் மு.க ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். தமிழ்நாடு கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசு தலைவரை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் 144 வாக்குகளுடன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படியுங்கள்: அரசியல்வாதியாக பேசுவதா? வேடிக்கை பார்க்க மாட்டோம்; ஆளுநருக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்த ஸ்டாலின்
இதுதொடர்பான விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆளுனருக்கு அரசாங்கம் மூன்று தலைப்புகளில் நிதி ஒதுக்குகிறது. அவை 1. செயலகம், 2. வீட்டுச் செலவுகள் (2 ராஜ் பவன்), 3. விருப்ப நிதி.
நமது முதல்வர் இந்த ஆளுனர் பொறுப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதன் காரணமாக ரூ. 2.41 கோடியாக இருந்த ராஜ்பவனுக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ. 2.86 கோடியாக அதிகரித்து, இந்த ஆண்டு ரூ. 3.63 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
ஆளுனரின் வீட்டுச் செலவுகளுக்கான ஒதுக்கீடு ரூ. 11.60 கோடியிலிருந்து கடந்த ஆண்டு ரூ. 15.93 கோடியாக அதிகரித்து, இந்த ஆண்டு ரூ. 16.69 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக விருப்ப நிதி, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் வழங்கப்படுகிறது. 2011-12 ல் ரூ. 8 லட்சமாக இருந்த விருப்ப மானியம், அடுத்த 2 ஆண்டுகளுக்கும் ரூ. 8 லட்சமாக வழங்கப்பட்டது. அதன்பின்னர் 2016-17ல் ரூ. 5.44 லட்சம், 2018-19ல் ரூ. 1.57 லட்சம் ஆக குறைந்து வந்தது. இப்படியாக குறைந்து வந்ததை 3 மாதங்களிலே ரூ.50 லட்சமாகவும், அடுத்து ரூ. 5 கோடியாகவும் மாற்றியிருக்கிறார்கள்.
இந்த விருப்ப நிதி ஏழை, எளிய மக்களின் பெரிய மருத்துவ தேவைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும். ஏழைப் பெற்றோரின் மகள் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என விதிகளில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.
நிதி ரூ. 1 லட்சமாக இருந்தப்போது எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் ரூ. 5 கோடியாக நிதி உயர்த்தப்பட்டதிலிருந்து, மீறப்பட்டு வருகிறது. அட்சய பாத்திரம் நிறுவனத்திற்கு என்று சொல்லி ஆளுனரின் வீட்டுச் செலவுகள் வங்கி கணக்கிற்கு நிதி மாற்றப்பட்டுள்ளது. அட்சய பாத்திரம் நிறுவனத்திற்கு நிதி நேரடியாக செல்லவில்லை. வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகை அட்சய பாத்திரம் நிறுவனத்திற்கும், வேறு சிலவற்றுக்கும் மாற்றப்பட்டுள்ளது.
ஆளுனர் மாளிகையில் மொத்தமாக 1ரூ. 8.38 கோடி செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ. 11.32 கோடி அவர்கள் கணக்கிற்கு மாற்றப்பட்டு, எங்கே செலவிடப்பட்டது என்ற விவரம் அரசுக்கு தெரியவில்லை. இது விதிமீறல்.
எல்லா மாநிலங்களிலும் விருப்ப நிதி குறைவாகவே வழங்கப்படுகிறது, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கூட. கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கத்தில் தலா ரூ. 25 லட்சம் ஒதுக்கப்படுகிறது. செப்டம்பர் 2021க்குப் பிறகு இந்த நிதியிலிருந்து செலவு செய்யப்பட்டதாக, அரசுக்கு வந்திருக்கிற தகவல்களின் படி, யூ.பி.எஸ்.சி மாணவர்கள் கூட்டம் ரூ. 5 லட்சம், தேனீர் விருந்து ரூ. 30 லட்சம், ஊட்டி ராஜ்பவன் கலாச்சார நிகழ்ச்சி ரூ. 3 லட்சம் போன்றவை வந்துள்ளது. ஆனால், இவை இந்த தலைப்பின் கீழ் வரக்கூடாது.
மேலும், ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும் நிதி கொடுக்கக் கூடாது என்ற விதி இருக்கிறது. ஆனால் அதுவும் மீறப்பட்டு ஒரு நபருக்கு மாதாமாதம் ரூ.58000 வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து பணியாளர்களுக்கும் போனஸ் என்று ஒரு முறை ரூ. 18 லட்சம் மற்றும் இன்னொரு முறை ரூ. 14 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நிதி வரைமுறைகளை மீறி செலவு செய்யப்பட்டிருக்கிறது. இது வருத்தமான விஷயம். இதனை உடனடியாக தடுக்க அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் பி.டி.ஆர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil