ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழு உறுப்பினராக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இவ்விவகாரங்கள் குறித்து பணி செய்யும்படி என்னிடமும், தமிழ்நாடு வணிக வரித் துறை அமைச்சர் பி.மூர்த்தியிடமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா முழுமைக்கும் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றக் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இக்குழுவுக்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதலா, ஆந்திர பிரதேச நிதியமைச்சர் புக்கனா ராஜேந்திரநாத், அசாம் நிதியமைச்சர் அஜந்தா நியோக், சத்தீஸ்கர் வணிக வரித் துறை அமைச்சர் டி.எஸ்.சிங் டியோ, ஒடிசா நிதியமைச்சர் நிரஞ்சன் புஜாரி ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவின் பணியானது, வரி அதிகாரிகளிடம் இருக்கும் தகவல் தொழில்நுட்ப கருவிகள் குறித்து ஆய்வு செய்வது, அமைப்பை வலுப்படுத்தவும், தொழில் செயல்பாடுகளில் மாற்றம் மேற்கொள்ளவும் பரிந்துரை வழங்குவது, வரி ஏய்ப்பு நடைபெறுவதற்கான வழிகளை கண்டறிவது, வருவாய் கசிவை தடுக்க மாற்றங்களைப் பரிந்துரைப்பது ஆகும்.
பிடிஆர் பதவி நீக்கம் செய்யப்பட இருப்பதாக வதந்தி பரவிய நிலையில் இந்த தகவல் முக்கியத்துவம் பெறுகிறது. பிடிஆர் ஆதரவாளர்கள் இதனை சமூக வலைதளங்களில் பெருமளவில் விவாதிக்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil