அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு பதில் அளிக்கும் வகையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதை கண்டறிவது பெரிய வித்தையில்லை, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதால் செல்லூர் ராஜூ எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எதிர்கட்சிகளின் கேள்விகளுகு சூடாகவும் கிண்டலாகவும் பதிலளிப்பது வழக்கம். நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் அதிமுகவின் கேள்விகளுக்கு அவருடைய பாணியில் பதில் அளித்துள்ளார்.
இந்த நிலையில், மதுரையில் ஸ்மார்ட் சிட்டி உள்பட எந்த வளர்ச்சி திட்டத்திலும் தவறு நடக்கவில்லை என்றும் அப்படி ஏதேனும் தவறு செய்தார்கள் என்றால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்த கருத்துக்குத்தான், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.
நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் செப்டம்பர் 16ம் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் மற்றும் கடந்த அதிமுக அரசின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட கருத்து கேட்காமல் மூன்று அமைச்சர்களின் வருமானத்தைக் கருத்தில் கொண்டு மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றங்கரையில் போடப்பட்ட சாலைகள் பல இடங்களில் பிளவு ஏற்பட்டு உள்ளது அந்த பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கூர்ந்து கண்காணிப்படவேண்டும். இதுபோன்று முறையீடுகள் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் மத்திய மாநில தணிக்கை துறை மூலம் கூர்ந்து கண்காணித்து எவ்வாறான முறைகேடுகள் நடந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பிடிஆர் கூறினார்.
இந்நிலையில் பெரியார், பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை பேசிய அவர், “மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. சட்டம் உங்கள் கையில் இருக்கிறது முடிந்தால் நடவடிக்கை எடுத்து மக்கள் முன்பு நிறுத்துங்கள். பல்லாயிரம் கோடி மதிப்பிலான மக்கள் நல திட்டங்களை பொத்தாம் பொதுவாக குறை சொல்ல கூடாது. அதிமுக ஆட்சியில் பல்வேறு பாலங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நிதி அமைச்சர் தொகுதியில் தான் கடந்த ஆட்சியில் 75% பணிகள் நடைபெற்று உள்ளன. அவர் இப்படி தவறாக பேசுவதால் மக்கள் தான் அவரை தவறாக நினைப்பார்கள். பெரியார் பேருந்து நிலையம் தவறான திட்டத்தில் கட்டப்பட்டால் உலக வங்கி நிதி கொடுத்து இருப்பார்களா? அந்த திட்டம் குறித்த எந்த விவரமும் எனக்கு தெரியாது, அது குறித்து எங்களுடைய கவனத்திற்கு வரவில்லை. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என அமைச்சர் பேச கூடாது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைசர் செல்லூர் ராஜூ “ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரெய்டு நடப்பது வழக்கம் தான். தவறு இருந்தால் அவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும். எங்களுக்கு மடியில் கணமில்லை, எனவே வழியில் பயமில்லை” என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதை கண்டறிவது பெரிய வித்தையில்லை, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதால் செல்லூர் ராஜூ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என்று கிண்டலாகப் பதில் அளித்தார்.