PTR Palanivel Thiaga Rajan : ஜி.எஸ்.டி. மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, தரவுகளின் பற்றாக்குறை எவ்வாறு நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதை தடுக்கிறது என்று விளக்கினார், ஜக்கி வாசுதேவுடனான பிரச்சனை குறித்தும் சிறிது பேசினார். திமுக எவ்வாறு கூட்டாட்சி கொள்கையை வகுக்கிறது என்றும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாக ஆசிரியர் (தேசிய விவகாரங்கள்) பி வைத்தியநாதன் ஐயர் நிர்வகித்த ஆன்லைன் உரையாடலில் பேசினார் தமிழக நிதித்துறை மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சர் பி.டி.ஆர்.
வைத்தியநாதன் ஐயர் : மே மாதம் நடைபெற்ற ஜி.எஸ்.எடி. கவுன்சிலில் பேசிய நீங்கள், அதனை ரப்பர் ஸ்டாம்ப் கவுன்சில் என்று கூறினீர்கள். மத்திய அரசிடம் இருக்கும் தீவிர அதிகார செறிவு குறித்தும் உரையாடினீர்கள். நீண்டகால மந்தநிலை காரணமாக அரசாங்க நிதி மோசமடைந்ததால் தான், மாநிலங்களிலும் கடுமையான நிலை உணரப்பட்டது என்று நினைக்கின்றீர்களா?
இதில் மூன்று-நான்கு அம்சங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு. மற்ற எந்த உறவுகளைப் போன்றும், இதுவும் காலப்போக்கில் சிதைந்துவிடும் தன்மை கொண்டது. அழுத்தமான காலங்களில் ஏற்படும் விரிசல்களும் முக்கியமானவை. எனவே சீரழிந்து வரும் பொருளாதாரம் மற்றும் கோவிட் நெருக்கடியின் கலவையானது உறவு இருக்க வேண்டிய இடத்தில் இல்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்துள்ளது. இதில் உள்ள முரண்பாடு என்னவென்றால், எனது மேற்கோள்களை நியாயப்படுத்த நான் வெகுதூரம் செல்ல வேண்டியதில்லை. குஜராத் முதல்வராக மோடி இருந்த போது, அவரின் ஆட்சியை காண வேண்டும். மாநிலங்களுடன் நிதி உறவின் அடிப்படையில் மத்திய அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிராகவே, அவர் முதல்வராக இருந்த போது அறிக்கை வெளியிட்டார்.
ஜி.எஸ்.டி. கவுன்சில் குறித்த கேள்வி மிகவும் நுணுக்கமானது. சிறப்பான ஆக்கத்தின் வெளிப்பாடாக அது கட்டப்படவில்லை. வழக்கமான ”ஷோமென்ஷிப்”ற்காக அவசரமாக அதை செயல்படுத்தியுள்ளனர். நான்கு மணி நேர அவகாசத்துடனான ஊரடங்கு மற்றும் ஒரே இரவில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழக்க நடவடிக்கை ஆகியவற்றின் விளைவை நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஜிஎஸ்டி மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நூற்றுக்கணக்கான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாங்கள் அதனை பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம். உண்மையில் நான்கரை வருடங்கள் கழித்து அதனை செய்து கொண்டிருக்கின்றோம்.
நான்கு மாதங்கள் நான் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருப்பதை வைத்து, பெற்ற என்னுடைய வரையறுக்கப்பட்ட புரிதலில், ஜி.எஸ்.டி. கவுன்சில் என்பது ஒரு ஆலோசனை குழு மட்டுமே. இது ஒரு புதிய விகிதத்தை முடிவு செய்யலாம், ஆனால் அது நடைமுறைக்கு வர, அரசு ஒரு அரசாணையை நிறைவேற்ற வேண்டும் அல்லது அதன் சொந்த வணிக வரி விதிகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
என்னுடைய கருத்துப்படி, மத்திய-மாநில உறவுகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் நிறைய தவிர்க்கப்படக்கூடியவை. உண்மையில் நாட்டை காயப்படுத்தும் விஷயம் என்னவென்றால், அதிகாரத்தின் செறிவு அதை பயன்படுத்த விரும்பாத அல்லது பயன்படுத்தத் தெரியாத நபர்களின் கைகளில் உள்ளது. பிறரின் கையில் இருந்து அந்த அதிகாரத்தை எடுத்துக் கொண்டு மிக மிக மோசமான செயல்களை செய்கிறார்கள். ஜிஎஸ்டி கவுன்சில் மிகவும் மோசமாக வடிவமைக்கப்பட்டிருப்பது இந்த கூற்றை மேலும் வலுவூட்டுகிறது.
வைத்தியநாதன் ஐயர் : மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான நம்பிக்கை முறிவடைந்துள்ளது என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். இது நிதி கூட்டாட்சி தொடர்பானது மட்டுமா அல்லது இது குறித்து துல்லியமாக விளக்க விரும்புகிறீர்களா?
இதற்கு நான் உங்களுக்கு உறுதியான இரண்டு உதாரணங்களைத் தருகின்றேன். முதலில் கெட்ட நம்பிக்கை. அதிகாரப் பரவலை 32% லிருந்து 42% (of divisible tax pool) ஆக மாநிலங்களுக்கு நகர்த்துவதற்கான முழு பாசாங்கு தனத்தை இது கூறுகிறது. எந்த ஒரு சுதந்திரமான அமைப்பும் நடத்திய மதிப்பீட்டாய்வை நீங்கள் உற்று நோக்கினால், அதிகாரப் பகிர்வு என்று அழைக்கப்படுவது எந்தவிதமான உண்மையான அதிகாரப் பரவலையும் ஏற்படுத்தவில்லை. அளவுக்கு அதிகமான பணத்தை, பிரிக்க முடியாத செஸ்ஸின் கீழ் கொண்டு சென்றுள்ளதால் நம்மால் பணம் ஏதும் பெற முடியாது. மானியங்கள் மற்றும் நல உதவி திட்டங்களின் மூலம் நாம் பெறும் பணமானது வரிகளின் பங்காக நாம் பெறும் மதிப்பை விட அதிகமாக உள்ளது. நாம் சரியான அளவில் நமக்கான வரி பணத்தை பெற்றால் அதை எவ்வாறு செலவழிக்கலாம் என்பதையும் நம்மால் முடிவு செய்யலாம்.
பிறகு ஏன் மத்திய அரசு சட்டத்தில் எழுதப்பட்ட 14% குறைந்தபட்ச இழப்பீட்டுத் திட்டத்தை வைத்திருக்கக்கூடாது என்ற அபத்தமான தர்க்கமும் உள்ளது. பணம் இல்லாத காரணத்தால் எங்களால் 14%-த்தை தர இயலாது என்று மத்திய அரசு கூறுகிறது. ஜிஎஸ்டியில் வசூலிக்கப்பட்ட செஸ் மூலமே இழப்பீடு தொகையை வழங்குமாறு அது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சி.ஏ.ஜியின் அறிக்கை, முதல் இரண்டு வருடங்களில் மத்திய அரசு செஸ்ஸில் மட்டும் 40 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்துள்ளது என்றும் அது மாநிலங்களுக்கு தர வேண்டிய அளவைக் காட்டிலும் கூடுதல் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதனை நீங்கள் மாநில அரசுகளின் கணக்கில் வைக்காமல் மீண்டும் மத்திய அரசின் டாக்ஸ் பூலில், பகிர்ந்து கொள்ளாமல் மாற்றிக் கொண்டீர்கள். செஸ்ஸை பயன்படுத்தி அந்த பணத்தை வசூலித்தீர்கள் ஆனால் பகிர்ந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் எந்த நோக்கத்திற்காக அது உருவாக்கப்பட்டதோ அதற்காக அந்த பணத்தை நீங்கள் பயன்படுத்தவில்லை.
வைத்தியநாதன் ஐயர் : திமுக தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஒரு அங்கமாக செயல்பட்டது. இரண்டு கட்சிகளையும் தனியாக பிரிக்கும் அளவிற்கு என்.டி.ஏ., பாஜக அல்லது திமுகவின் சொந்த கொள்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?
இப்போதைக்கு, பிஜேபியை விட திமுகவின் நிலைப்பாட்டிற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான இடைவெளி - இது பாஜகவுடன் மட்டுமே எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. திமுகவின் நிலைப்பாடு மாற்றமின்றி தொடர்கிறது. நாங்கள் எப்போதும் கூட்டாட்சி சித்தாந்தங்களை கொண்டவர்கள் தான். அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மாநிலங்களிலிருந்து அதிகாரத்தின் கீழ்நிலைகளுக்கும் பரவலாக்கப்பட வேண்டும். ஆனால் பாஜகவின் நிலைப்பாடு மிகவும் மாறிவிட்டது. இதே பிரதமரும், உள்துறை அமைச்சரும் குஜராத்தில் இருந்த போது சிறந்த கூட்டாட்சி சித்தாந்தங்களைக் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால், தற்போது அவர்கள் மிகச்சிறந்த மையவாதிகளாக மாறிவிட்டனர். அவர்கள் உணவு கொள்கை முதல் கல்வி வரை வரி, கழிப்பறை வரை அனைத்தையும் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். எனவே, இது சில மட்டத்தில் பாஜகவை விட இந்த அரசாங்கம் மாறிவிட்டது.
மற்றொரு மட்டத்தில், மதச்சார்பற்ற, சமூக நீதி கட்சிகளின் கருத்து இந்துத்துவா தத்துவத்தால் இயக்கப்படும் கட்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆனால் அங்கு கூட, அந்த தத்துவம் நிலையானதாக இல்லை. வாஜ்பாயின் நிர்வாகம் இன்று நாம் காணும் நிர்வாகத்திலிருந்து வேறுபட்டது என்று பெரும்பாலான மக்கள் உணர்வார்கள்.
லிஸ் மேத்யூ : சமீபத்திய பாராளுமன்ற கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு திமுக அமைதியாக ஆதரவு அளித்தது. மம்தா பானர்ஜி முயற்சி எடுத்தது போல போல, குறைந்தபட்சம் இன்று நீங்கள் எழுப்பிய பிரச்சனைகளிலாவது, அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைப்பதில் திமுக முன்னிலை வகிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
இந்த கட்சியில் நான் மிகவும் இளையவன். தேசிய அளவில் திமுகவின் இடம் குறித்து கருத்து சொல்லும் அதிகாரம் எனக்கு இல்லை. ஆனால், இந்நாட்டின் எதிர்காலம் பிராந்திய கட்சிகள் மற்றும் மாநில அரசுகளின் கையில் உள்ளது. இந்த நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் சிக்கல்களை புரிந்து கொள்ளும் எவராலும், ஒரே தேசம் ஒரே வரி போன்ற கருத்துகளை செயல்படுத்த முடியாது என்பதை நன்கு உணர்ந்திருப்பார்கள். வழிபாட்டு நம்பிக்கை போன்ற இந்த கருத்துகளுக்குள் நீங்கள் எவ்வளவு பேரை கொண்டு வந்தாலும் அது தோல்வியில் தான் முடியும்.
தோல்வி அடைவதை நாங்கள் தினமும் பார்க்கின்றோம். ஸ்வச் பாரத் நிதியை பயன்படுத்தி உங்களால் கழிப்பறைகளை கட்ட முடியாது. ஒரு தேசியக் கொள்கை பற்றிய இந்தக் கருத்து இயல்பாகவே சுய-தோல்வியாகும். எவ்வளவு நேரம், எவ்வளவு வலிக்கு பிறகான தோல்வி என்பது தான் கேள்வி.
தேசிய கட்சி என்ற கருத்தும் கூட முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. வடகிழக்கு மற்றும் கோவாவில் பாஜக மாட்டிறைச்சிக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் சில பாஜக ஆளும் மாநிலங்களில் நீங்கள் மாட்டிறைச்சி எடுத்து சென்றால் கொல்லப்படலாம். காங்கிரஸ் ஒரு சில கட்சிகளுக்கு எதிராக உள்ளது. ஆனால் இந்த கூட்டணியில் நாங்கள் அனைவரும் இருக்கின்றோம். 10 முதல் 12 மாநிலங்களில் மட்டுமே பாஜக அதிக பலம் கொண்டதாக இருக்கிறது. சில மாநிலங்களில் அதிகாரத்தை விலைக்கு வாங்குகிறது அல்லது மக்களை விலைக்கு வாங்குகிறது. நான் என் கட்சித் தலைவர் முக ஸ்டாலினிடம் நல்ல நிர்வாகம் எப்படி இருக்கும் என்பதற்கான தரவை உங்கள் தத்துவத்தால் உந்தப்பட்ட செயல்கள் மூலம் நாம் காட்டலாம் என்றேன். அளவுக்கு அதிகமான அதிகாரங்களை வைத்துக் கொண்டு ஒன்றுமே சாதிக்க முடியாதவர்களோடு ஒப்பீடு செய்யும் போது வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் என்ன சாதிக்க முடியும் என்பதை நாம் காட்டுவோம் என்றேன். மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அவருடைய மதிப்புகள் மீது மிகவும் தெளிவாக உள்ளார்.
ஆன்ச்சல் மேகஸின் : ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை குறித்து நீங்கள் பேசினீர்கள். இந்த ஆண்டு வளர்ச்சி கணிப்புகளின் அடிப்படையில் தொகை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பழைய நிலுவைத்தொகை இன்னும் வழங்கப்படாத சூழலில் இது நியாயமானதா? எனது இரண்டாவது கேள்வி, கோவா மற்றும் பிற பாஜக ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சருடன் நீங்கள் பகிரங்கமாகப் பேசியது பற்றியது. மற்ற நிதி அமைச்சர்களும் ஜிஎஸ்டி கவுன்சிலில் தங்கள் கருத்துக்களை கேட்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இந்த அமைப்பு தனித்துவமான அபாயத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதாவது ஒரு மாநிலம் சிக்கலை எதிர்கொண்டால் அதை கவனித்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் உங்களுக்கு அமைப்பு ரீதியான ஆபத்து இருக்கும்போது, மாநிலங்களும் மத்திய அரசும் வீழ்ச்சியடையும் போது, முழு இழப்பீட்டு பொறிமுறையும் தோல்வியடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் இந்த நிலையில் இருக்கின்றோம் என்றால் நம்முடைய பொருளாதாரம் முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளதே காரணம். ஜிஎஸ்டியின் மற்ற அம்சங்களைப் போல, இதுவும் நன்கு சிந்திக்கப்படவில்லை.
கோவா நிதி அமைச்சருடன் எனக்கு ஒரே ஒரு பிரச்சனை இருந்தது. ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு, தகவலுக்கு என்னென்ன வரும் என்று ஒன்றரை மணி நேரம் விவாதித்தோம். பஞ்சாப் நிதி அமைச்சர் மன்ப்ரீத் பாதல் உள்ளிட்ட சில அமைச்சர்கள். அங்கீகரிக்கப்படாமல், வெறும் தகவல்களாக நமக்கு தெரிவித்தால் அதில் சட்டத்தின் அழுத்தம் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
ஏனென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக நாங்கள் இதை அங்கீகரிக்க வேண்டும் என்பதே விதி … அவர் சொன்னது 'தகவலுக்காக' என்ற வார்த்தையை 'ஒப்புதலுக்காக' மாற்றவும், அதனால் நாங்கள் அதை அங்கீகரிக்க முடியும், மேலும் நீங்கள் சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பெறுவீர்கள் அவ்வளவுதான். ஆனால் கோவா அமைச்சர் தேச விரோதம், போர் போன்ற சூழல் என்று கோபத்துடன் பேசினார். இது மிகவும் முட்டாள்தனமானது. கொடூரமானது, ஏனென்றால் அவர் உண்மையிலேயே சரியான கேள்விகளை எழுப்பும் நபர்களின் நேர்மை, திறமை, தேசபக்தி ஆகியவற்றிலேயே தன்னுடைய கவனத்தை திருப்பினார். கோவா போன்ற ஒரு சிறு மாநிலத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு அமைச்சர் கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதிகளாக வந்திருக்கும் அமைச்சர்களின் செல்லுபடியாகும் அபிலாஷைகள் குறித்து கேள்வி எழுப்புவது மோசமானது என்று நான் கூறினேன். இந்த சமயத்தில், திருமதி நிர்மலா சீதாராமன் என்னுடைய கருத்தை மறுக்கும் வகையில், இந்த கவுன்சிலில், சிறிய மாநிலங்கள் அல்லது பெரிய மாநிலங்கள் இல்லை என்றார். 15 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு பாஜகவின் சிறிய மாநிலங்கள் மிகச்சிறிய மாநிலங்களாக இருப்பதைப் பற்றி விவாதங்களை முன்வைத்தனர். ‘மேடம் நீங்கள் பெரிய மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்கள் இல்லை என்று கூறி என்னை கண்டித்தீர்கள்’ என்றேன்… கோவா அமைச்சர் வெளியே வந்து ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தி என்னைப் பற்றி பல விதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
வைத்தியநாதன் ஐயர் : தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் குறித்து நீங்கள் பேசுவதை எப்படி பிரித்து அறிகிறீர்கள்?
அதை தீர்க்க முடியுமா இல்லையா என்று நான் சொல்லவில்லை. ஆனால் தரவுகளை பயன்படுத்தாமல் இருப்பது ஒரு குறைபாடாகும். ஏன் என்றால் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தின் போதும் அதே வரி விகித அடுக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மறுபடியும் தரவுகள் இல்லை. பாஜகவால் ஆளப்படும் மாநில அரசுகளும் கூட மத்திய அரசு கூறும் அனைத்திற்கும் ஆம் என்று சொல்வதால் அல்லது அரசைக் காட்டிலும் அதிக விசுவாசம் கொண்டிருப்பதாலும் அதிக பிரச்சனைகளை சந்திக்கின்றன என்பதை நான் உணருகின்றேன். ஏனென்றால் எந்த முதலமைச்சரும் தங்கள் செயல்படும் திறனை இழக்க விரும்பமாட்டார்கள். அரசியலமைப்பு அதிகாரங்களை மக்களுக்கு வழங்க வேண்டும், அதற்காக தான் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
எனவே இந்த மையமயமாக்கல் கருத்து பிஜேபி அல்லது திமுகவைப் பற்றியது அல்ல, இது ஒவ்வொரு மாநில அரசாங்கத்திற்கும், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் எதிரானது. வித்தியாசம் என்னவென்றால், இன்றைய பிஜேபி தனது மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை இத்தகைய அடக்குமுறை கட்டைவிரலின் கீழ் வைத்திருக்க முடிகிறது. ஆனால் அது நிரந்தரமாக நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை.
அருண் ஜனார்தனன் : பொதுக் கடன் பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதைச் சமாளிக்க உங்கள் திட்டம் என்ன? அதனை கட்டுக்குள் கொண்டுவருவதா அல்லது புதிய வருவாய் மாதிரிகளை ஆராய்வதா?
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார சிதைவு மோசமானது. .. நாங்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரூ. 5,70,000 கோடி ரூபாய் கடன் சுமை இருக்கின்ற நேரத்தில் ஆட்சிக்கு வந்துள்ளோம். ஆனால் 9 லட்சம் கோடி கடனை பார்க்கின்றோம். ஆனாலும், நாங்கள் எங்களின் வார்த்தைகளை காப்பாற்றினோம். முதல்வர் ஒவ்வொரு ரேசன் அடைக்கும் ரூ. 4 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இங்கு தான் பிரச்சனை இருக்கிறது. அட்டை வைத்தவர்களுக்கு ரூ. 4 ஆயிரம் நாங்கள் தந்திருந்தாலும், அதனை பெற தகுதியற்றவர்களும் அதனை பெற்றுள்ளனர் என்பது தெளிவாக உள்ளது. நம்முடைய தரவு அமைப்புகள் எப்படி மோசமாக உள்ளன என்பது எங்களுக்குத் தெரியாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
நம்முடைய தரவுகள் மோசமாக இருப்பதற்கு கூட்டாட்சி போதுமானதாக இல்லாததும் ஒரு காரணம். உதாரணத்திற்கு கோவின் போர்டலில் அனைத்து தடுப்பூசிகளும் பதிவிடப்படுகிறது. ஆனால், அந்த மூன்றாவது அலைக்குத் தயாராவதைத் தொடங்க, தடுப்பூசி ஊடுருவலுடன் மேலோட்டமாக ஒரு செரோ சர்வே செய்யச் செல்லும்போது, அதற்கு நம்மிடம் தரவுகள் இல்லை. மானியங்களை இலக்காக வைத்தால், யார் ரூ. 4 ஆயிரத்தை பெறக்கூடாது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். எந்த குடும்பத்தில் வருமான வரி செலுத்துபவர்கள் இருக்கிறார்களோ, அக்குடும்பம் அதைப் பெறக்கூடாது என்று என்னைக் கேட்டால் சொல்வேன். ஆனால் நம்மிடம் தரவுகள் இல்லை. எல்லாவற்றையும் மையப்படுத்தியதால் நாங்கள் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறோம், தரவு இல்லாததால் எங்களால் சரியாக நிர்வகிக்க முடியவில்லை. அதில் சில எங்கள் சொந்த தவறு, சில அரசாங்கத்தின் வடிவமைப்பின் தன்மையில் தவறு.
பணம் எங்கிருந்து வரும் என்று நான் கவலைப்படவில்லை, ஆனால் அழுகிய இந்த அமைப்பைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். அரசாங்கத்தை நிர்வகிக்கும் திறன் தீவிரமாக குறைந்துவிட்டது. இதை திருப்புவது மிகவும் கடினம்.
ஆனந்த கோயங்கா : நீங்கள் ஒரு தனியார் துறை பின்னணியை கொண்டிருந்து அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள். பொருளாதார ரீதியாக சரியாக செய்ய வேண்டிய விசயங்களுக்கும் அரசியல் ரீதியாக செய்ய வேண்டிய சரியான விசயங்களுக்கும் இடையே எப்போதெல்லாம் முரண்படுவதாக உணருகின்றீர்கள்?
இரண்டு நிலை வேறுபாடுகள் உள்ளன. ஒரு நிலை என்னவென்றால், ஒரு முதலீட்டு வங்கியாளராக அல்லது உலகளாவிய வங்கியாளராக, ஒரு முதலாளித்துவவாதி. ஒரு அரசியல்வாதியாக, ஒரு திராவிடராக, ஒரு இந்தியனாக, நாம் அனைவரும் ஓரளவிற்கு சோசலிஸ்டுகள். எனவே அது ஒன்றும் கடினமான மாற்றம் இல்லை. ஏன் என்றால் அவை இரண்டும் இருவேறு சூழல். மிகவும் கடினமான மாற்றம் என்னவென்றால், உடைந்த ஒரு அமைப்பை எதிர்த்துப் போராட முயற்சிக்கிறோம் என்பது தான்.
ஒரு வணிக நிறுவனத்தில் சரியானது என்ன என்பதை நீங்கள் கண்டறிந்தவுடன் அதை நீங்கள் செய்தீர்கள். அதற்கு எதிர்ப்பு என்று ஏதும் இல்லை. இங்கே நீங்கள் செய்ய வேண்டிய சரியான விஷயம் என்ன என்பதை அறியலாம் அதன் பின்னால் இருக்கும் அனைத்து வகையான தடைகளையும் நீங்கள் அறிய முடியும். இது தான் நான் தினமும் இங்கே எதிர்கொள்ளும் உண்மையான சவால்.
பி. வைத்தியநாதன் : மறைந்த டிடிபி தலைவர் என் டி ராமாராவ் மையத்தை 'கருத்தியல் கட்டுக்கதை' என்று விவரித்தார். மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையேயான உறவு கடந்த 10-15 ஆண்டுகளில் ஒரு பக்கமாக சாய்வதற்கு காரணம் என்ன?
மத்திய அரசின் பங்கு என்ன என்பதை நான் தெளிவாக காண்கின்றேன். வெளியுறவுக் கொள்கை, மாநிலங்களுக்கு இடையேயான வணிகம், சர்வதேச வர்த்தகம், வர்த்தக கொள்கை மற்றும் தடுப்பூசி கொள்முதல் ஆகியவை மத்திய அரசின் பொறுப்பில் இருக்க வேண்டும். மத்திய அரசே இருக்க கூடாது என்று சொல்லும் ஒருவன் கிடையாது நான். ஒரு திறமையான, செயல்பாட்டு மற்றும் சக்திவாய்ந்த மத்திய அரசாங்கத்திற்கான மிகத் தெளிவான தேவை உள்ளது. டெல்லியில் அமர்ந்து கொண்டு எந்த பள்ளிக்கு கழிப்பறை தேவை என்று முடிவு செய்ய கூடாது. அதனை சென்னையிலேயே தீர்மானிக்க முடியும். அந்த அதிகாரத்தை நாம் பஞ்சாயத்துகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும்.
ஆனால் நீங்கள் மையப்படுத்திய போக்குகளைப் பார்க்க துவங்கினால் … UPA- வின் இரண்டாவது ஆட்சியில் இருந்தே பிரச்சனை துவங்குகிறது. அதனை என்.டி.ஏ. அரசாங்கம் 7 வருடங்களில் மிகவும் அதிகரித்துள்ளது. ஊரடங்கு தளர்வுகளின் ஆரம்ப காலத்தில் எப்போது நாம் சலூன் கடைகளை திறக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூற முயற்சி செய்தது. முடிதிருத்தும் கடை திறப்பதில் கூட தேசிய கொள்கை இருப்பது அர்த்தமுள்ளதாகவா இருக்கிறது?
இந்த மையமாக்கல் ஒரு தோல்வி அடையும் போக்கை கொண்டுள்ளது. கேள்வி என்னவென்றால், அது தோல்வியடையும் முன் அது எவ்வளவு சேதத்தை ஏற்படுத்துகிறது என்பது தான். எவ்வளவு தூரம் மையமாக்க முயற்சி செய்கின்றீர்களோ அவ்வளவு தூரம் விளைவுகள் மோசமாக இருக்கும்.
வைத்தியநாதன் ஐயர் : ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவுடனான வெளிப்படையான சர்ச்சை, அரசு கோவில்களின் பாதுகாவலராக இருக்கிறது என்பதை காட்டியது.
ஜக்கி வாசுதேவ் போன்ற ஒருவருடன் என்னுடைய கருத்துகள் ஒத்துப் போகிறதா அல்லது வேறுபடுகிறதா என்பது பிரச்சனை இல்லை. ஆனால் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருட்களிலிருந்து எப்படியாவது அரசாங்கத்தின் கையை நீக்கிவிடலாம் என்ற கருத்தில் அடிப்படை சிக்கல்கள் உள்ளன.
பிரசாந்தா சாஹூ : ஜி.எஸ்.டியின் கீழ் வரி வருமானம் உயரவில்லை என்று பல மாநிலங்களும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இழப்புத்தொகை வழங்கும் வழிமுறையும் அடுத்த ஆண்டு முடிவுக்கு வர உள்ளது. இது வருவாயை மேலும் குறைக்கும்.
ஆமாம், மத்திய அரசு செஸ் வசூலிக்கப் போகிறது மற்றும் குறிப்பாக இரண்டு வருட எதிர்பாராத மேக்ரோ ஆபத்து அல்லது தோல்வி காரணமாக நிறைய விஷயங்கள் மீட்டமைக்கப்பட்டுள்ளன. இழப்பீட்டின் காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் நான் மற்ற மாநிலங்களுடன் இணைகிறேன். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர் இழப்பீடு குறித்த சிறப்பு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு உறுதியளித்தார்.
தமிழகம் போன்ற ஒரு மாநிலம் தங்களின் பொருளாதாரத்தை ஒழுங்காக நடத்துகிறது என்றால், நாங்கள் அதை விற்பனை வரி/VAT ஆட்சியில் செய்திருக்கலாம் . எந்த இழப்பீட்டுக்கும் நாங்கள் தகுதியுடையவர்களாக இருப்போம் என்று எனக்குத் தெரியவில்லை, ஏனெனில் 'பார்’ 14% ஆண்டு வளர்ச்சி ஆகும்
ஜிஎஸ்டி உற்பத்தி அடிப்படையிலான வரியிலிருந்து நுகர்வு அடிப்படையிலான வரியாக மாற்றப்பட்டது என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம், எனவே ஜிஎஸ்டி பெரிய உற்பத்தி மாநிலங்களில் இயல்பாகவே பின்தங்கியிருந்தது. ஆனால் தமிழ்நாடு கொஞ்சம் தனித்துவமானது, ஏனென்றால் நாங்கள் அதிக உற்பத்தியாளர்கள் மற்றும் அதிக தனிப்பட்ட நுகர்வு கொண்டவர்கள், ஏனென்றால் குஜராத் அல்லது மகாராஷ்டிராவை விட நாம் மிகவும் குறைவான சமுதாய அடுக்குகளைக் கொண்டிருக்கிறோம். எனவே எங்கள் iGST உள்ளேயும் வெளியேயும் தோராயமாக தட்டையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் எங்கள் மாநிலத்தின் அமலாக்கத்துறை சிறப்பாக உள்ளது. உள்வரும் மற்றும் வெளியே செல்லும் ஐஜிஎஸ்டிக்கு இடையே இருக்கும் இடைவெளிகளை நாங்கள் தொடர்ந்து கண்டறிந்து வருகின்றோம். வருவதை விட வருடத்திற்கு இரண்டாயிரம் கோடிகளை நாங்கள் செலுத்துகிறோம். இந்த மாறுபாடுகள் அதிகம் கவலையை ஏற்படுத்துகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.