தீபாவளி பண்டிகைக்கு தி.மு.க சார்பில் தலைவர்கள் யாரும் வாழ்த்து கூறுவது வழக்கம் இல்லாத நிலையில், தி.மு.க அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகிய இரண்டே அமைச்சர்கள் மட்டும் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் ஆகிய பண்டிகைகளுக்கு தி.மு.க சார்பில் தலைவர்கள் வாழ்த்து சொல்வது வழக்கம். ஆனால், தீபாவளிக்கு தி.மு.க தலைவர்கள் வாழ்த்து கூறுவது இல்லை. தி.மு.க தலைவர்கள் தீபாவளிக்கு வாழ்த்து கூறுவதை தவிர்த்தே வந்துள்ளனர். இதனால், தி.மு.க தலைவர்கள் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமல் புறக்கணிக்கிறார்கள் என்று பா.ஜ.க-வினர் விமர்சனம் செய்துவந்தனர்.
அண்மையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தி.மு.க துணை பொதுச் செயலாளரும் நீலகிரி தொகுதி எம்.பி-யுமான ஆ.ராசா தீபாவளி பண்டிகைக்கு அறிவியல் காரணங்களைக் கூறாததால் தி.மு.க வாழ்த்து சொல்வதில்லை என்று கூறினார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இரண்டே அமைச்சர்கள் மட்டும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்கள்.
இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி, “இல்லங்கள் ஒளிரட்டும், உள்ளங்கள் மகிழட்டும், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் பதிவிட்டுள்ள தீபாவளி வாழ்த்துப் பதிவில், பெரியார், அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகிய 5 பேர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
அதே போல, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “இல்லங்களில் மகிழ்ச்சி ஒளிரட்டும், அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாழ்த்துப் பதிவில், பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகிய 4 பேர் படங்கள் இடம்பெற்றுள்ளன. தி.மு.க-வில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் என இரண்டே அமைச்சர்கள் மட்டும் தீபாவளி வாழ்த்து தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“