பொதுமக்களுக்கு பொது நிதி மேலாண்மை குறித்து விளக்குவதற்காக தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (நவம்பர் 1) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: “வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் தமிழ்நாடு அரசு என்ற கோட்பாட்டின்படி ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில் முக்கியமான பயன்களை அடைந்துள்ளோம். முடங்கியுள்ள பணங்களை மீட்டெடுக்கவும், செலவு செய்யாத திட்டத்தின் நிதிகளை மீட்டெடுக்கவும், அதிகாரமில்லாத நீதிகளை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் படி 2000 கோடி ரூபாய் செலவு செய்யப்படாத நிதிகளை திரும்பபெற்று வருகிறோம் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கியதில் குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடியில் கணிசமான தொகை தவறாக கடன் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பண பயன் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒரே நபர் பலமுறை பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு சிறிய நிலத்துக்காக கடன் பெற்று இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. சில இடங்களில் நகை மதிப்பீடு முறையாக நடத்தாமலும் கடன் வழங்கப்பட்டு உள்ளது.
இது போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் புதிய அணுகுமுறை மூலம் தீர்வு காணப்படும். மறைந்தவர்கள் பெயரில் ஓய்வூதியம் சென்று இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. இதே போல் மறைந்தவர்கள் பெயரிலும் ரேஷனில் இலவச அரிசி பெறுவதும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
தவறாக நிதி சென்றடைய கூடாது என்பதை அறிந்து அந்த பணம் மிச்சப் படுத்தப்பட்டு உள்ளது. முதியோர் ஓய்வூதியம் வாங்குபவர்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் அதிகரிக்க முதலமைச்சர் உத்தரவிட்டதின் அடிப்படையில் தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உள்ளோம்.
அதிமுக ஆட்சியில் செலவினங்களுக்கான சிஸ்டம் சரி இல்லை. கடந்த ஆட்சியில் திட்டங்களை செயல்படுத்தும் சிஸ்டம் சரியான முறையில் இல்லை. கடந்த ஆட்சியில், 110 விதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி சரியான முறையில் ஒதுக்கப்படாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"