தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடர் என்று பிஸியாக இருந்தாலும் அதே நேரத்தில் சமூக ஊடகங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன்னை யாராவது அரசியல் தலைவர்கள் அல்லது நெட்டிசன்கள் தேவையில்லாமல் தவறாக விமர்சித்தால் அவர்களுக்கு தர்க்கப்பூர்வமாக ஆதாரங்களுடன் பதிலடி கொடுப்பார். அந்த வரிசையில், நெட்டிசன் ஒருவர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை விமர்சித்து மீம் போட, அதற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தனது அனுபவத்தை சொல்லி சவால் விடுத்தார். இதைப் பார்த்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சாதாரண ஒரு நபருக்கு இப்படித்தான் பேசுவதா என்று விமர்சித்து இடித்துரைத்துள்ளார்.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் பொது வாழ்க்கைக்கு மிகவும் தாமதமாகவே வந்தேன். நான் என்னுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் போதுமான சாதனைகளை நிகழ்த்திவிட்டு, குடும்பத்தை கவனித்துவிட்டு, அதன்பின் என்னுடைய அப்பா, தாத்தா போல பொது வாழ்க்கையில் ஈடுப்பட்டு மக்களுக்கு உதவ வந்தேன். முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த ட்வீட்டிற்கு நெட்டிசன் ஒருவர், அவரை விமர்சனம் செய்திருந்தார். “நான் என்னுடைய தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் போதுமான சாதனைகளை நிகழ்த்தினேன் என்று பிடிஆர் குறிப்பிட்டிருந்ததை நெட்டிசன் விமர்சித்திருந்தார். அமைச்சரை இப்படி இவர் விமர்சனம் செய்ததை பலரும் கண்டித்து இருந்தனர். நெட்டிசனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மீம் ஒன்றை வெளியிட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் காட்டமாக பதில் அளித்திருந்தார்.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தனது பதில் ட்வீட்டில், “நண்பா நான் உங்களை விட பெரியவன்.
உங்களுக்கு இரண்டு சவால் விடுகிறேன் (உங்களை போன்ற மோசமான கலாச்சரவாதிகளுக்கான சவால்)….
1) உங்களை விட 10 மடங்கு நல்ல வேலை மற்றும் தொழில் கொண்ட 100க்கும் அதிகமான நபர்களை நான் வழி நடத்தி இருக்கிறேன்.
2) நீங்கள் உங்கள் மொத்த வாழ்நாளில் பார்க்கும் வேலையை விட 100 மடங்கு பணிகளை நான் நடத்திக் காட்டி இருக்கிறேன்.
சவாலுக்கு தயாரா சிறியவரே?” என்று பிடிஆர் மிகவும் மோசமான அந்த மீமிற்கு பதில் அளித்து இருந்தார்.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பதில் ட்வீட்டைப் பார்த்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அதில், “சாதாரண நபர் ஒருவருக்கு நிதி அமைச்சர் பதில் அளிக்கும் விதத்தை பாருங்கள்.. நாம் இருக்கும் பதவி என்பது கடந்த காலத்தை நினைத்து பெருமை கொள்வதற்கான கோபுரம் கிடையாது.. நாம் இருக்கும் பதவி என்பது பொறுப்பு நிறைந்தது. சாதாரண மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை நாம் வகிக்கும் பதவி நமக்கு வழங்கி இருக்கிறது. பிடிஆர் அதை புரிந்து கொள்வார் என்று நினைக்கிறன்” என்று இடித்துரைத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.