திருச்சி மாநகராட்சி 64-வது வார்டு திமுக உறுப்பினர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருச்சி மாநகராட்சி 64 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினராக இருப்பவர் மலர்விழி ராஜேந்திரன். இவருடைய வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதியில் சாக்கடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியினை முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் என்பவரின் மகன் வேல்முருகன் ஒப்பந்தம் எடுத்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை மாமன்ற உறுப்பினர் மலர்விழி ராஜேந்திரன் சாக்கடை கட்டும் பணிகளை ஆய்வு செய்தபோது சாக்கடை தனியார் இடத்தில் கட்டப்படுவதை கண்டு பணிகளை உடனே நிறுத்துமாறும் கூறியுள்ளார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/18/trichy-111-2025-07-18-15-52-09.jpg)
இதில் இருவருக்கும் இடையே ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு வேல்முருகன் மற்றும் அவரது ஆட்கள் மலர்விழியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மலர்விழி கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். காவல் நிலையத்தில் ஆய்வாளர் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்தும் காவல்துறையினர் அவர் புகாரை வாங்கவில்லை. மேலும், அவருக்கு காயம் ஏற்பட்டிருந்ததால் கவுன்சிலர் மலர்விழி உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே வேல்முருகன் தரப்பை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மலர்விழி ராஜேந்திரன் வீடு, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனம், டிவி, ஏர்கூலர்களை அடித்து நொறுக்கியதுடன் மலர்விழி மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஆளும்கட்சி தரப்பு கவுன்சிலரையும் தாக்கிவிட்டு வீட்டையும் அடித்து துவம்சம் செய்த நபர்களை காவல்துறை கண்டும் காணாததுமாக இருந்ததை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் மலர்விழி தரப்பினர் கேகே நகர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/18/trichy-11-2025-07-18-15-52-09.jpg)
இது குறித்து தகவல் அறிந்த கேகே நகர் போலீசார் மற்றும் மற்றும் காவல்துறை துணை ஆணையர் ஈஸ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ச்சுவார்த்தையின்போது காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்த சாலை மறியலை கைவிட்டு அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் கேகே நகர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, திருச்சி மாநகராட்சியின் ஒப்பந்ததாரருக்கும், கவுன்சிலர் மலர்விழிக்கும் இடையே மழைநீர் வடிகால் கட்டும் பணியை மேற் கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கவுன்சிலர் தரப்பினர் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளை செய்து வந்த பணியாளர்களை தாக்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த பணியாளர் தரப்பினர் கவுன்சிலர் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர் என்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கவுன்சிலர் மலர்விழி தரப்பினர் அளித்த புகாரின்பேரில், கே.கே.நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்