ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியதால், இன்று மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து செப்டம்பர் முதல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து, பள்ளி தேர்வுகள் மற்றும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்த அந்தந்த அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழக அரசும் அனைத்து தேர்வுகளும் நேரடியாக நடத்தப்படும் என்று அறிவித்தது. இதில் அண்ணா பல்கலைக்கழகம் நேரடி செமஸ்டர் தேர்வுக்கான தேர்வு தேதியை அறிவித்தது.
இந்தநிலையில் பல்வேறு இடங்களில் மாணவர்கள், தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக் கோரி போராட்டம் நடத்தினர். குறிப்பாக மதுரை மற்றும் புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி போராட்டம் நடத்தினர். பெரும்பாலான வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டுள்ளதால், தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் நேரடி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், செமஸ்டர் தேர்வு தேதியை ஒத்திவைத்தது.
இந்தநிலையில், இன்று ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியது. இதனையடுத்து, இன்று மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெரினாவில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மெரினாவில் உள்ள சர்வீஸ் சாலையும் மூடப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொதுமக்கள் யாரும் இன்று மெரினா கடற்கரைக்கு வரவேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil