தமிழ்நாடு அரசின் முக்கிய இணையதளமான www.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்கள் இல்லாமல், அப்டேட் இல்லாமல் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது என்ற புகார்கள் எழுந்துள்ளன.
அனைத்து துறைகளையும் இணைத்து, முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை, துறைகள், உள்ளாட்சி அமைப்புகளின் விவரங்கள் உட்பட நிர்வாகம் பற்றிய அனைத்து தகவல்களையும் மக்கள் அணுக வழிவகை செய்வதாக உள்ளது தமிழ்நாடு அரசின் முக்கிய இணையதளமான www.tn.gov.in இணையதளம்.
இந்த இணையதளத்தில் முதலமைச்சர், அமைச்சர்களின் தொலைபேசி எண்கள், அரசாணைகள், அறிவிப்புகள் மற்றும் செய்தி வெளியீடுகள், திட்டங்கள், படிவங்கள், குறைகேட்பு ஆகியவை உள்ளன. ஆனால், சில துறைகள் தவிர்த்து, பல துறைகள் பல துறைகள் விவரங்களைப் அப்டேட் செய்யாததால், இந்த இணையதளம் பொதுமக்களுக்கு பயனற்றதாக ஆகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் www.tn.gov.in இணையதளத்தில் பொதுநலன் தொடர்பான அரசாணைகள் பகுதி உள்ளது. இதில் அவ்வப்போது வெளியாகும் அரசாணைகள் இந்த பக்கத்தில் அந்தந்த துறைகளின் இணைப்பில் அப்டேட் செய்யப்படுகின்றன.
தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் வேறு சில துறைகளைத் தவிர, பல துறைகளில் அரசாணைகள் எந்த அப்டேட்டும் செய்யப்படாமல் உள்ளது. பொதுப்பணித்துறை (PWD) கடைசியாக 2019 இல் பதிவேற்றிய அரசாணை மட்டுமே உள்ளது. இதே நிலைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான வளர்ச்சித் திட்டம் மற்றும் சிறப்பு நடவடிக்கைத் துறை, 2019 முதல் எந்த ஒரு அரசாணையையும் அப்டேட் செய்யாமல் இருக்கிறது.
நீர்வளத் துறையைப் பொறுத்தவரை, அதில் செயலாளரின் பெயர் உட்பட எந்த விவரமும் இல்லை.
இந்த இணையதளத்தின் குறைதீர்க்கும் பிரிவில், பல இணைப்புகள் இல்லை அல்லது அந்த இணைப்புகள் மோசமாக வேறு ஒரு துறைக்கு கொண்டு செல்கின்றன. ஒரு இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அந்த இணைப்பை தொட்டால், அது வேறு ஒரு துறையின் தளத்துக்கு கொண்டு செல்கிறது. உதாரணமாக, சிவில் சப்ளைஸ் துறைக்கான இணைப்பு ஒன்று வேளாண் பொறியியல் துறைக்கு கொண்டுசெல்கிறது.
அதுமட்டுமல்ல, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் இணையதள முகவரி கூட தவறாக உள்ளது: அதிகாரப்பூர்வ இணையதளம் www.shrc.tn.gov.in ஆக இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசின் முக்கிய இணையதளத்தில், www.shrc.tn.nic.in என கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இணைப்பைத் தொட்டால் இணையத்தில் இந்த இணையதளம் கிடைக்கவில்லை என்று காட்டுகிறது.
இது குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மிட்டல் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், அவர், www.tn.gov.in என்ற இணையதளத்தில் ‘லாக் இன்’ செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தகவல்களைப் புதுப்பிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட அந்தந்த துறையினரிடம் உள்ளது. மற்ற துறைகளுக்கு தொழில்நுட்பம் குறித்த உதவிகளை வழங்க நாங்கள் உதவ முடியும். ஆனால், தகவல் தொழில்நுட்பத்துறையால் துறையால் ஒவ்வொரு அரசாணையையும் கண்காணிக்க முடியாது. தகவலை அப்டேட் செய்வது அவர்களின் கடமை” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் முக்கிய இணையதளத்தில் அரசாணை உள்ளிட்ட மற்ற விவரங்கள் அனைத்தையும் அப்டேட் செய்வது அந்தந்த துறையினரின் பொறுப்புதான். ஆனால், பணிச்சுமை காரணமாக தகவல்களை அப்டேட் செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றனர். “அரசாங்க இணையதளத்தில் தகவல் அப்டேட் செய்யப்படுவதை உறுதி செய்வது செயலாளர்களின் கடமை. ஆனால், வழக்கமான வேலை காரணமாக, அப்டேட் செய்யும் வேலைகளில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை” என்று உயர் அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு அரசின் முக்கிய இணையதளமான www.tn.gov.in இணையதளத்தில் பல துறைகளின் விவரங்கள், அரசாணைகள் அப்டேட் செய்யப்படாமல் இருப்பது அரசின் திட்டங்களை மக்களுக்கு அறிவிப்பதில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தும். இனியாவது, தமிழக அரசின் இணையதளத்தில் உடனுக்குடன் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது. அதனால், இனிமேலாவது தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் www.tn.gov.in அப்டேட் செய்வார்களா?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.