Advertisment

கோவை சித்தாபுதூர் தூய்மை பணியாளர்கள் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் தேவை: பொதுமக்கள் கோரிக்கை

கோவையில், அரைகுறையாக கட்டப்பட்ட குடியிருப்பு கட்டிடம் - போதுமான அடிப்படை வசதிகள் சரிவர இல்லாமல் கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டதாக காண்பிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Public demand to provide basic facilities in Coimbatore Chittabudur sanitation workers residence

ஆறு வருடங்களாக கட்டப்பட்ட குடியிருப்புகள் பணிகள் நிறைவடையாத நிலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Coimbatore | மாவீரன் திரைப்பட காட்சிகளை கண்முன் கொண்டு வந்த சித்தாபுதூர் குடியிருப்பு கட்டிட வாசிகளின் அவலநிலை.

கோவை சித்தாபுதூர் பகுதியில் 1970"களில் தூய்மை பணியாளர்கள் அதிகமாக வசித்து வந்தனர். 

Advertisment

வீடு வசதிகள் இன்றி வாழ்ந்து வந்த அவர்களுக்கு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து சும்மா நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு அந்த குடியிருப்புகள் பழுதடைந்த காரணத்தினால் கடந்த அதிமுக ஆட்சியில் 2018ம் ஆண்டு குடியிருப்புகளை இடித்துவிட்டு அதே இடத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதனால் அங்கிருந்த பொதுமக்கள் அனைவரையும் வெளியேறும் படி அதிகாரிகள் கூறியதால் அனைவரும் அங்கிருந்து வெளியேறி கோவையில் பல்வேறு இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

15 மாதங்களுக்குள் லிப்ட், குடிநீர் இணைப்பு, புதிய மின் இணைப்பு, பூங்கா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்படும் எனவும் அதற்கு ஒரு பைசா கூடிய பயனாளிகள் தரவேண்டியதில்லை அப்போதைய தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

அதனை நம்பி அனைத்து மக்களும் வீடுகளை காலி செய்து சென்ற நிலையில் 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பணிகள் தற்பொழுது 2024"ம் ஆண்டு வரை நடைபெற்று வருகிறது.

Public demand to provide basic facilities in Coimbatore Chittabudur sanitation workers residence
அருண்

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

அதில் இரு நிகழ்வாக இந்த குடியிருப்புகளையும் திறந்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அனைத்து பயனாளிகளும் இந்த 7 மாடி குடியிருப்புக்கு குடியேறினர். 

பிறகுதான் இந்த குடியிருப்பில் அடிப்படை வசதிகள் எதுவும் முழுமையாக செய்யப்படவில்லை எனவும் பணிகள் முழுமையாக முடிவதற்குள்ளாகவே இதனை ஒப்படைத்து விட்டது தெரிய வந்து.

பயனாளிகள் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தனர். இந்த குடியிருப்பில் 224 வீடுகள் உள்ளன, இதில் எந்த ஒரு வீட்டிலும் மின் இணைப்பு குடிநீர் இணைப்பு எதுவும் செய்து தரப்படவில்லை. அதாவது ஸ்விட்ச் பாக்ஸ் இருந்தும் மின் இணைப்பு இல்லை, குழாய் இருந்தும் தண்ணீர் வராது. லிப்ட் இருந்தும் மின்சாரம் இல்லாததால் இயங்காது. மேலும் அதிமுக 2018 ஆம் ஆண்டு அதிமுகவால் கூறப்பட்ட பூங்கா இங்கு அமைக்கப்படவே இல்லை.

பூங்கா அமைக்கப்படும் என்று கூறிய இடம் கற்களும் மண்ணும் கொட்டப்பட்டு புதர்மண்டி கிடைக்கிறது.  அதுமட்டுமின்றி 400 ஸ்கொயர் ஃபீட்டில் ஒவ்வொரு வீடுகளும் அமைக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில் வீட்டிலுள்ள சமையலறையும் கழிவறையும் அருகருகில் அமைக்கப்பட்டு உள்ளே நுழைவதற்கு கூட போதிய வசதி இல்லாமல் கட்டப்பட்டுள்ளது.

வீடுகளில் டைல்ஸ் போட்டு தரப்படும் என்று கூறியிருந்த நிலையில் வெறும் சிமெண்ட் தரை மட்டுமே போடப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி அங்கு பூசப்பட்ட வண்ண பூச்சுகளும் கை வைத்தால் ஒட்டிக்கொண்டு வருகின்றன. 

இது குறித்து அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் நாகமணி - விஜயலட்சுமி -அருண், “2018"ஆம் ஆண்டு இப்பகுதியில் இருந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பை இடித்துவிட்டு பல்வேறு வசதிகளுடன் கூடிய குடியிருப்பு 15 மாதங்களில் கட்டி தரப்படும் என்று அப்போதைய தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மான் அர்ஜுனன் கூறியதை தொடர்ந்து அவர் மீது உள்ள நம்பிக்கையினால் வீடுகளை காலி செய்து சென்றதாகவும் அதனை தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளாக குடியிருப்பு பணிகள் நடைபெற்று வந்ததாகவும் இதனால் வாடகை வீடுகளில் வசித்து வந்ததாக தெரிவித்தனர். மேலும் இந்த குறிப்பிட்ட இடைக்காலத்தில் தங்களது உறவினர்களையும் இழந்து உள்ளதாக கண்ணீர் மல்க கூறினர். 

Public demand to provide basic facilities in Coimbatore Chittabudur sanitation workers residence
நாகமணி

இந்த நிலையில் கடந்த மாதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த குடியிருப்புகளை ஒப்படைப்பதாக கூறியதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், இந்த வீடுகளை ஒப்படைத்த பிறகு இங்கு வந்து பார்த்த போது தான் மின் இணைப்பு குடிநீர் இணைப்பு போன்ற எந்த இணைப்பும் தரப்படாமல் பணிகளை முடிவடையாமலேயே தங்களிடம் ஒப்படைத்து ஏமாற்றியது தெரிந்தது எனவும் இதனால் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்ததாக தெரிவித்தனர்.

2018 ஆம் ஆண்டு வீடுகளை காலி செய்து செல்லும் பொழுது ஒரு வீட்டிற்கு 8000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறிய நிலையில் தற்பொழுது வரை அந்த இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை எனவும் கூறினர். 

மின் இணைப்பு குடிநீர் இணைப்பு எதுவும் இல்லாததால் தெருவிற்குச் சென்று குடிநீர் பிடித்து வருவதாகவும், லிப்ட் எதுவும் இயங்காததால் ஏழு மாடிகள் ஏறி இறங்குவதாக தெரிவித்தனர்.

மின் இணைப்பு இல்லாததால் இரவு வேலைகளில் மண்ணெண்ணெய் விளக்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் பொழுதை கழிப்பதாக தெரிவித்தனர். மேலும் படிக்கின்ற குழந்தைகளும் மின்சார வசதி இல்லாமல் சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர். 

இங்குள்ள அதிகாரிகள் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பொய் கூறி, அவரும் உரிய ஆய்வு மேற்கொள்ளாமல் இதனை தங்களிடம் ஒப்படைத்து விட்டதாக குற்றம் சாட்டிய அவர்கள் தற்பொழுது உதயநிதி ஸ்டாலினை தங்களால் சந்திக்க இயலுமா என கேள்வி எழுப்பினர். 

மேலும் அப்போதைய காலத்தில் ஒரு பைசாகூட கொடுக்க வேண்டாம் என்று கூறிய நிலையில் தற்பொழுது ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று அதிகாரிகள் நிர்பந்திப்பதாகவும் இது என்ன நியாயம் எனவும் ஆத்திரமடைந்தனர். இந்த பணம் சம்பந்தமாக கோவை மாவட்டத்தில் மட்டும் ஆறு கலெக்டர்களை சந்தித்து புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர். 

Public demand to provide basic facilities in Coimbatore Chittabudur sanitation workers residence

இங்கு உள்ள அனைவரும் தூய்மை பணிகளுக்கும் கூலி பணிகளுக்கும் செல்வதால் தங்களை தீண்டத்தகாதவர்களை ஒதுக்குவது போல் நடத்துவதாக தெரிவித்தனர். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவித்து விட்டால் அதன் பிறகு எந்த அதிகாரிகளிடம் முறையிடுவது என்ன செய்வது என்று தெரியவில்லை என வேதனை தெரிவித்தனர். 

எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக முழுமை பெறாத பணிகளை முடித்து மின்சார இணைப்பு குடிநீர் இணைப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் இனிவரும் நாட்களில் இது போன்ற முடிவுற்ற திட்டங்களை பயனாளிகளுக்கு தரும் முன்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதா என்று அதிகாரிகள் அமைச்சர் ஒருமுறை ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு வழங்கினால் நன்றாக இருக்கும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் தற்போதைய தெற்கு சட்டமன்ற உறுப்பினராக உள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இதனை கண்டு கொள்ளாதது வியப்பாகவே உள்ளது. 

கோவைக்கு வருகை தரும் பொழுதெல்லாம் பல்வேறு அரசு திட்டங்களை  பா.ஜ.க கட்சியினர்களைக் கொண்டு செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வரும் அவர் இப்படிப்பட்ட ஒரு பெரும் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருப்பது அங்குள்ள பொதுமக்களை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. 

மேலும் இந்த அடுக்குமாடி குடியிருப்பு அமைந்திருக்கும் இடம் கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருகிலேயே இருப்பது என்ற நிலையில் திமுக அரசு நிறைவேற்றும் திட்டங்களில் ஏதேனும் சிறு குறைகளை பயனாளிகள் தெரிவித்தாலே அரசிற்கு கண்டன அறிக்கைகள் புகார்கள் என கொதித்தெளும் வானதி சீனிவாசன் இதற்கு வாய் திறக்காமல் மௌனம் காத்து வருவது ஏன் என்பது என..? குடியிருப்பு பகுதி வாசிகள் மத்தியில் கோபத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக கட்டிடத்தின் அவல நிலை சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்பட காட்சிகளைப் கண் முன் கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment