/indian-express-tamil/media/media_files/2025/06/24/madurai-high-court-2025-06-24-22-10-02.jpg)
சட்டவிரோத பேனர்கள், விளம்பரப் பலகைகள்: உடனடியாக அகற்ற தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
பொதுமக்கள் மற்றும் சாலைப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர், விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற மாநிலஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், காவல்துறை, வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் இத்தகைய பொருட்களைத் தடுத்து நிறுத்துவதற்கும், அகற்றுவதற்கும் கடமைப்பட்டுள்ளனர். அவ்வாறு செய்ய தவறினால், கடமை தவறிய செயலாக கருதப்படும். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
"அதிகாரிகள் இத்தகைய சாலைகள் வழியாகச் செல்லும்போது சட்டவிரோத பேனர்கள், விளம்பர பலகைகளை பார்த்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காக்கின்றனர். இது பொதுப்பணியில் அவர்கள் தவறு இழைத்ததைக் காட்டுகிறது. இதை சகித்துக்கொள்ள முடியாது. அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை விழிப்புடனும், சுறுசுறுப்புடனும் செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதுபோன்ற பல வழக்குகள் நீதிமன்றத்தில் அடிக்கடி தாக்கல் செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுவதற்காக பொதுமக்கள் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியம் இல்லை. இது உள்ளாட்சி, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கடமை. எனவே, சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த டி.அருளரசன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் பேரில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தனது மனுவில், அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்திற்காக, விதிகளை மீறி விளம்பரப் பலகைகளை வைப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இத்தகைய விளம்பரங்களை பாதுகாப்பான முறையில் வைப்பதற்கு உரிய அனுமதி பெற வேண்டியது அவர்களின் கடமை என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த உத்தரவு குறித்த அறிக்கை ஆகஸ்ட் 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறி, வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.