சென்னையில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதிலும், பட்டப்பகலில் சென்னையின் இருவேறு பகுதிகளில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்களின் சிசிடிவி வீடியோ மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
குன்றத்தூர் அருகே இரண்டாம் கட்டளை, ராகவேந்திரா நகர், கம்பர் தெருவை சேர்ந்த தம்பதியர் அசோக் குமார் -ஜெயஸ்ரீ ஆகியோர், நேற்று முன்தினம் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஜெயஸ்ரீயின் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினார். இதனைக்கண்டு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் அந்த மர்ம நபரை விரட்டிப் பிடிக்க முயன்றனர். ஆனால், சிறிது தூரத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அந்நபர் தப்பித்து சென்றார். இச்சம்பவத்தில் ஜெயஸ்ரீ காயமடைந்தார்.
இச்சம்பவத்தின் சிசிடிவி வீடியோ பதிவின் அடிப்படையில் அந்த மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
Advertisements
அதேபோல், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மேனகா என்பவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று அரும்பாக்கம் வந்தார். அப்போது, பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த இருநபர்களில் ஒருவர், மேனகாவின் 15 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொள்ள முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த மேனகா தன் சங்கிலியை கையால் பிடித்துக்கொள்ளவே, அந்நபர் நகையுடன் மேனகாவை சாலையில் தரதரவென இழுத்துச் சென்றார். ஒருகட்டத்தில் நகையை பறித்துக்கொண்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பித்து சென்றனர்.
இச்சம்பவத்தின் சிசிடிவி வீடியோவை ஆராய்ந்து வரும் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இவ்வாறு பட்டப்பகலில் நடைபெறும் வழிப்பறி சம்பவங்களால், தங்களால் சாலையில் நடமாட கூட முடிவதில்லை என வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள், இதனைத் தடுக்க காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.