கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 10 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி ”சிற்பியின் பாரதி கைதி எண் 253” என்ற ஆங்கில மொழியாக்கக் கவிதை நூலை வெளியிட்டார்.
முன்னதாக பேசிய அவர், “அமெரிக்காவில் வசித்த போது அங்கிருந்த தமது நண்பர்களுடன் தாய்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பு பற்றி எப்பொழுதும் உரையாடுவதை நினைவு கூர்ந்தார்.
மேலும் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றி வந்திருக்கின்ற படைப்பாளர்களுக்கு விருது வழங்குவதில் மிகவும் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது பெறுபவர்கள் பற்றிய அறிமுகவுரையை பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் வழங்கினார்.
இவ்விழாவில் முனைவர் ப.மருதநாயகம் தமிழ் மொழியின் சிறப்புக் குறித்தும், ”சிற்பியின் பாரதி கைதி எண் 253” என்ற நூலின் சிறப்புப் பற்றியும் உரையாற்றினார்.
விழாவில் உ.வே.சா.தமிழறிஞர் விருதை முனைவர் பா.ரா.சுப்ரமணியன், பெரியசாமித்தூரன் படைப்பாளர் விருது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த் தொண்டர் விருது முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும், சிறப்பு விருதுகளை முனைவர் சு.சண்முகசுந்தரம், முனைவர் ஆ.மணி, எழுத்தாளர் க.அம்சப்ரியா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் மதியுரைஞர் பெ.இரா.முத்துசாமி உட்பட தமிழ் அறிஞர்கள்,தமிழ் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பி.ரஹ்மான்
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“