Selfie Accident : சினிமாவில் காட்டுவது போல் எதிரே வரும் ரயில் முன்பு போஸ் கொடுக்கும் செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் செல்பியால் எத்தனை உயிர்கள் பறிபோக போகிறதோ? நடைபயணம், வீடியோக்கள், செய்திகள் மூலம் செல்பி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எத்தனை நடந்தாலும் இளைஞர்கள் அதை சற்றும் மதிக்காமல் இருப்பது வேதனையை மட்டுமே தருகிறது.
செல்பி மோகத்தால் புதுக்கோட்டையில் கல்லூரி மாணவன் உயிர் பறிபோகியுள்ளது. புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை எஸ்எஸ்ஐ குமாரவேலின் மகன் மணிகண்டன். அருகில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் மணிகண்டன் சம்பவத்தன்று, தனது நண்பர்களுடன் பூச்சி துறை அருகே உள்ள ரயில்வே பாலத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மானாமதுரை- மன்னார்குடி ரயில் முன்பு மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் செல்பி எடுத்ததாக கூறப்படுகிறது. சினிமாவில் காட்டுவது போல் ம்ணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் பேஸஞ்சர் ரயில் எதிரே வரும் போது போஸ் கொடுக்க செல்பி எடுத்துள்ளனர்.
அப்போது அதிவேகத்தில் வந்த ரயில் மோதி மணிகண்டன் மற்றும் மகேந்திரன் ஆகியோரை தூக்கி வீசியது. இதில் எதிர்பாராத விதமாக ரயில் மோதி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த மணிகண்டனின் நண்பர் மகேந்திரன், சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மணிகண்டன் இறந்த செய்தி, உடனடியாக அவரின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை விரைந்த அவர்கள் மணிகண்டனின் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் காணபோர்களையும் கண்கலங்க வைத்தது.