WEB EXCULUSIVE
புதுவை யூனியன் பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அதனை அகற்றிவிட்டு, என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது. இதையடுத்து புதுவை முதல்வர் நாராயணசாமி டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படாத நாராயணசாமி, இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பதவியை தக்கவைத்துக் கொண்டார்.
புதுவை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டார். அப்போதிருந்தே நாராயணசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட ஆரம்பித்தது. ஆளுநர் கிரண் பேடியே நேரடியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அமைச்சர்களுக்கு தெரியாமலேயே துறை அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் நடத்தினார்.
இதையடுத்து, நாராயணசாமி சட்டபேரவையில் கிரண் பேடியை கடுமையாக விமர்சனம் செய்தார். மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் மோசடி நடந்ததாக கிரண் பேடி குற்றம் சுமத்தினார். இது பெரும் மோதலாக வெடித்தது.
டெல்லி சென்ற நாராயணசாமி, கவர்னர் மீது உள்துறை அமைச்சரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து ஆளுநர் கிரண் பேடியும் டெல்லி சென்று உள்துறை அமைச்சரிடம், புதுவை நிலவரம் குறித்து விவரித்தார். இதையடுத்து செண்டாக் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி, இரண்டு நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் அமீத் ஷா புதுவை வந்தார். அவரை என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான என்.ரெங்கசாமி சந்தித்துப் பேசினார். குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பதற்காக சந்தித்ததாக சொல்லப்பட்டது. அதையடுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களும் அமித் ஷாவை சந்தித்துப் பேசினர்.
ரெங்கசாமியும், அதிமுகவினரும் சந்தித்துப் பேசிய போது, புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை அப்புறப்படுத்துவது குறித்து அமித் ஷாவோடு ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் இப்போது கசிய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து அரசியல் காய் நகர்த்தல்கள் வேகமாக நடக்க ஆரம்பித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ.க்களை, என்.ஆர்.காங்கிரசுக்கு இழுக்க தீவிரமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்களில் 2 பேருக்கு அமைச்சர் பதவி தருவதாகவும் உறுதி கொடுக்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.கள் என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுவையில் மொத்தம் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் 15, என்.ஆர். காங்கிரஸ் 8, அதிமுக 4, திமுக 2, சுயேட்சை 1 அடங்குவார்கள். காங்கிரஸ் கட்சியின் சபாநாயகர் ஒருவர் போக திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 5 உறுப்பினர்கள் வெளியேறினால், காங்கிரஸ் பெரும்பான்மை இழந்துவிடும். விரைவில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆட்சி மாற்றத்துக்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
இதை தெரிந்து கொண்ட நாராயணசாமி, டெல்லியில் முகாமிட்டுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்க தீவிர முயற்சி எடுத்து வருவதாக காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, ‘இந்தியா முழுவது காங்கிரஸ் இல்லாத ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று மோடியும் அமீத் ஷாவும் தீவிரமாக உள்ளனர். அப்படித்தான் கோவாவில் காங்கிரஸ் அதிக இடங்களை வென்றாலும் ஆட்சியை பாஜக பிடித்துக் கொண்டது. இப்போது புதுவையில் காங்கிரஸ் கட்சியை அப்புறப்படுத்து முயற்சி எடுக்கிறார்கள். அவர்கள் முயற்சி பலிக்காது’ என்றார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Puducheri regime change in power narayanasamy camp in delhi