புதுவை சட்டப்பேரவையின் மூன்று நியமன உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
யூனியன் பிரதேச அரசுகளுக்கான சட்டத்தின்படி, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்து கடந்த ஜூன் மாதம் உள்துறை அமைச்சகம் ஆணையிட்டது. எந்தவித அறிவிப்புமின்றி மூவருக்கும் ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் முறையான அறிவிப்பு இல்லை என்று சொல்லி, பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்துவிட்டார்.
மூவரின் நியமனம் என்பது அரசியல் சட்டத்தின்படியும், புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகள் படியும் உரிய தகுதி வாய்ந்த நபரால் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் அது செல்லாது என்றும், எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகள், வசதிகள் கோரிய முறையீடுகள் நிராகரிக்கப்படுவதாகவும், நியமனம் செல்லாது என்றும் பேரவை தலைவர் முடிவெடுத்து பேரவை செயலாளர் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார்
இதனிடையே நியமன உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசும், தலைமை செயலாளரும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஆளுநரின் நியமனத்தை தடைவிதிக்கக்கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் லக்ஷ்மி நாராயணன் (இந்திய தேசிய காங்கிரஸ்) தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதே போல் நியமன எம்.எல்.ஏ-க்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவுகளை ரத்துசெய்யக்கோரி தனலட்சுமி தொடர்ந்த பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
நவம்பர் 23ஆம் தேதி சட்டப்பேரவை தொடங்க உள்ள நிலையில், பேரவைக்குள் அனுமதிக்க முடியாது என்ற அறிவிப்பை ரத்து செய்து பேரவைக்குள அனுமதிக்கக்கோரி நியமன எம்.எல்.ஏ-க்கள் சாமிநாதன், செல்வ கணபதி, சங்கர் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த மூன்று வழக்குகளும் இன்று தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதிஎம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது. அரசியலைமைப்பு சட்டம் வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையிலேயே மூவரின் நியமனங்கள் நடந்துள்ளது என்றும், அதனை எதிர்த்த லட்சுமி நாராயணன் வழக்கில் எவ்வித தடையையும் நீதிமன்றம் வழங்காத நிலையில், மூவரும் பேரவைக்குள் செல்வதை யாரும் தடுக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே தமிழக பேரவை வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டதால், புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்கள் வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்து வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.