தி.மு.க.,வுக்கு பயந்து நடக்கிறது காங்கிரஸ்; புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர்

தனது ஆட்சியில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நாராயணசாமி தற்போதைய ஆட்சியை பற்றி தொடர்ந்து அவதூறாக பொய்யான தகவல்களை பேசி வருவது கண்டிக்கத்தக்கது – புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன்

தனது ஆட்சியில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நாராயணசாமி தற்போதைய ஆட்சியை பற்றி தொடர்ந்து அவதூறாக பொய்யான தகவல்களை பேசி வருவது கண்டிக்கத்தக்கது – புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன்

author-image
WebDesk
New Update
Puducherry ADMK chief

அரசின் தவறுகளையும், முறைகேடுகளையும், மக்கள் விரோத திட்டங்களையும் சுட்டிக்காட்டும் கடமையும், பொறுப்பும் எதிர்கட்சிகளுக்கு உண்டு என புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த சில நாட்களாக ஓடும் வண்டி, ஓடாத வண்டி, டப்பா வண்டி, காயிலான் கடை வண்டி என்றும், ஏதோ கூட்டணியை முடிவு செய்யும் விவகாரம் இங்குள்ள தி.மு.க, காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ளது போன்று மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறி வந்தனர். தற்போது சென்னையில் இருந்து வந்த தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காங்கிரஸ் கட்சிக்கு வார்னிங் கொடுத்து பொதுக்கூட்டத்தில் பேசியவுடன் காங்கிரஸ் கட்சி தற்போது பயந்து அடங்கி போயுள்ளது. புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் பலவீனத்திற்கு இது ஒரு உதாரணமாகும். காங்கிரஸ் கட்சியை அடக்கி ஆளும் தமிழக தி.மு.க.,வின் உண்மை நிலையை இங்குள்ள உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டும்.

அரசின் தவறுகளையும், முறைகேடுகளையும் தட்டிக்கேட்க திராணியற்ற கட்சியாக 6 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள தி.மு.க இருக்கிறது. சட்டமன்றத்தின் தற்போதைய நடவடிக்கைகளை பார்க்கும் போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி ஆட்சியாளர்களுடன் தி.மு.க கூட்டணி வைத்துள்ளதாக தெரிகிறது.

Advertisment
Advertisements

அரசின் நிதியுதவி பெறாத சிகப்பு ரேஷன் கார்டு உள்ள குடும்ப தலைவிக்கு ரூ.2,500, மஞ்சள் நிற ரேஷன் கார்டு உள்ள குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தது பாராட்டுதலுக்குரிய நல்ல திட்டமாகும். ஒரு உன்னதமான திட்டம் அறிவிக்கும் போதே அதை வாங்க மக்கள் உயிரோடு இருப்பார்களா என அபசகுணமாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சாபமிட்டுள்ளார். ஏற்கனவே இப்படித்தான் ஒவ்வொரு வீட்டிற்கும் குழந்தைகள் தவிர எல்லாவற்றையும் அரசு கொடுக்கிறோம் என பேசி பெண்களின் வெகுஜன எதிரியாக உள்ளார். ஆனால் இன்றுவரை தன்னை திருத்திக் கொள்ளாமல் இப்படி பொறுப்பற்ற முறையில் பேசுவது முன்னாள் முதலமைச்சருக்கு அழகல்ல.

புதிய ஆட்சி அமைந்தவுடன் முதியோர், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு ரூ.500 உயர்த்தப்பட்டது. அந்த தொகை இன்று வரை தடையின்றி வழங்க்பபட்டு வருகிறது. அதே போன்று அரசின் நிதியுதவி எதுவும் பெறாத ஆதரவற்ற குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதில் இன்று வரை சுமார் 58,000 மகளிருக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படுகிறது. அறிவிக்கப்பட்ட கேஸ் மானியம் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கும், மீனவர்களுக்கும் உயர்த்தப்பட்ட மாதாந்திர உதவித்தொகையும் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் விட முதியோர், விதவை உதவித்தொகை பெற விண்ணப்பம் செய்திருந்த சுமார் 24,500 நபர்கள் நிதியுதவி பெறும் திட்டத்தில் இந்த 3 ஆண்டுகளில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த கால தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சராக இருந்த நாராயணசாமி ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு நலத்திட்ட உதவிகளிலும் ரூ.100 கூட உயர்த்தாமல் 5 ஆண்டுகால ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியை நடத்தினார். மேலும் கடந்த தி.மு.க, காங்கிரஸ் ஆட்சியில் விதவை, முதியோர் நலத்திட்ட உதவிக்கு புதியதாக விண்ணப்பித்தவர்களில் ஒருவருக்கு கூட வழங்காமல் புண்ணியத்தை தேடி சென்றவர் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி என்பதை மக்கள் நினைவில் வைத்துள்ளனர்.

மலிவு விளம்பர அரசியலுக்காகவும் தனது கூட்டணி கட்சியின் தலைவர் ஸ்டாலினின் கண்பார்வைக்காகவும், தொடர்ந்து மத்திய அரசையும் துணைநிலை ஆளுநரையும் எதிர்த்து ஆட்சியை நடத்தி புதுச்சேரி அரசியல் வரலாற்றில் தனது ஆட்சி என்பது இருண்ட ஆட்சியாக மாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆவார். தனது ஆட்சியில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நாராயணசாமி தற்போதைய ஆட்சியை பற்றி தொடர்ந்து அவதூறாக பொய்யான தகவல்களை பேசி வருவது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

அரசின் தவறுகளையும், முறைகேடுகளையும், மக்கள் விரோத திட்டங்களையும் சுட்டிக்காட்டும் கடமையும், பொறுப்பும் எதிர்கட்சிகளுக்கு உண்டு. அந்த வகையில் அனுபவமிக்க முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் எடுத்துக்கூற முன்வர வேண்டும். இவரது பல்வேறு குற்றச்சாட்டுகள் பொய் உரைத்தும், நகைப்பும், ஆச்சர்யமும் மிகுந்ததாக உள்ளது. இதற்கு மேலும் இப்படிப்பட்ட அரசியல்வாதிகளின் பொய் குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

Dmk Admk Congress Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: