சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவத்தை திசை திருப்பும் வகையில் அ.தி.மு.க.,வினர் மீது பொய் புகார் கூறும் தி.மு.க.,வினரை கண்டிப்பதாக புதுச்சேரியில் அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், அந்த சாரை கைது செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றது.
மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், குற்றவாளி ஞானசேகருடன், தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இருக்கும் புகைப்பட பதாகைகளை ஏந்தி அ.தி.மு.க.,வினர் தி.மு.க அரசை கண்டித்தும், உண்மையான குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் அன்பழகன், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவத்தை திசைதிருப்பும் வகையில், அ.தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடும் தி.மு.க அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. குற்றவாளி ஞானசேகரன் கூறிய அந்த சார்? இதில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும், எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சி தூக்கி எறியப்பட்டு, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி அமையும் எனவும் அன்பழகன் கூறினார்.