புதுச்சேரியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த 3 மாடி வீடு சாய்ந்து முழுவதுமாக இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி வழியாக செல்லும் உப்பனாறு வாய்க்காலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்காலில் பக்கவாட்டு பகுதியில் மண் அள்ளும் பணியில் ஜே.சி.பி இயந்திரம் ஈடுபட்டது. இதனால் வாய்க்கால் ஓரம் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிர்வு ஏற்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இத்தகவல் அறிந்து தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வும் அ.தி.மு.க மாநில செயலாளருமான அன்பழகன் மற்றும் அப்பகுதி மக்கள் கூடி வாய்க்கால் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது திடீரென அப்பகுதியில் சேகர் - சித்ரா தம்பதியினரின் புதியதாக கட்டப்பட்டிருந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்தது.
அதிகப்படியான மணல் அள்ளியதன் காரணமாக வீடு இடிந்து விழுந்ததாக குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள், அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் முதல்வரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“