Advertisment

புதுச்சேரியில் போலி மதுபான விற்பனை அதிகரிப்பு; ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த அ.தி.மு.க கோரிக்கை

புதுச்சேரி மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் போலி மதுபானங்கள் தயாரித்து புதுச்சேரியில் விற்பனை செய்வதோடு தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் இங்கிருந்து அனுப்புகின்றனர் – அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன்

author-image
WebDesk
New Update
Puducherry ADMK chief

புதுச்சேரி அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுச்சேரி மாநிலத்திலும் போலி மதுபானங்கள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். போலி மதுபானம் கடத்தல், தயாரித்தல், கஞ்சா விற்பனை போன்ற விவகாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisment

புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி கஞ்சா உள்ளிட்ட பல்வேறு விதமான போதை பொருட்கள் விற்பனை செய்யும் மாநிலமாகவும், போலி மதுபானம் தயாரிக்கும் பிராந்தியமாகவும் இருந்து வருகின்றது. இதனால் புதுச்சேரி மாநிலத்தினுடைய பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்கங்கே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் வகையில் போதை பொருள் விற்பனை, போலி மதுபானம் தயாரித்தல் போன்றவை நடைபெற்று வருகிறது. 

கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழக தி.மு.க ஆட்சியில் போலி மதுபானம், விஷ சாராயத்தால் 20-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அந்த விஷ சாராயம் புதுச்சேரியில் வில்லியனூர் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க.,வினுடைய இரண்டு முக்கிய பிரமுகர்களால் புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்ததிலிருந்து பல தமிழக முக்கிய பிரமுகர்கள் புதுச்சேரியில் உள்ள அரசியல் பிரமுகர்களுடன் கைகோர்த்துகொண்டு போலி மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரியில் இருந்து போலி மதுபானம் தயாரிக்கப்பட்டு தினசரி தமிழகப் பகுதியான விழுப்புரம், மரக்காணம், திண்டிவனம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்தப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டையில் புதுச்சேரியில் இருந்து கடத்தப்பட்ட போலி மதுபானங்களை தமிழக காவல் துறையினர் பறிமுதல் செய்து 5-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்தனர். மேலும் அந்த சரக்கு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. போலியான ஸ்டிக்கர் எப்படி ஒட்டப்பட்டது என்கின்ற விதத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. அவர்களை தமிழக போலீசார் கைது செய்தனர். இந்த போலி மதுபானம் தயாரித்த இடத்தில் ஆய்வு செய்தபோது இரண்டு மூடி போட்ட வேன்களில் போலி மதுபானம் தயாரிப்பதற்கான பல்வேறு இயந்திரங்களும், புதிய ஆலோகிராம் ஸ்டிக்கரும், அதே போல் தமிழக டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படுகின்ற பல்வேறு பிராண்டு சரக்குகள் சம்பந்தமான லேபில்களும் இருந்தன. சுமார் 30 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் தொழிற்சாலை அமைத்து போலி மதுபானம் தயாரித்த 5 நபர்களை தமிழக காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் ஒரு தொழிற்சாலை அமைத்து போலி மதுபானம் தயாரிக்கப்படுவதை இங்குள்ள காவல்துறை மற்றும் கலால்துறையினர் ஏன் கண்டுபிடிக்கவில்லை. புதுச்சேரி மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் போலி மதுபானங்கள் தயாரித்து புதுச்சேரியில் விற்பனை செய்வதோடு தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் இங்கிருந்து அனுப்புகின்றனர். இப்படி தயாரிக்கப்படும் போலி மதுபானங்கள் மூலம் அரசுக்கு ஒரு ரூபாய் கூட கலால் வரியை, விற்பனை வரியோ பெறுவது இல்லை. இதனால் புதுச்சேரி மாநிலத்திற்கு வரவேண்டிய வருவாய் மிகப்பெரிய அளவில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு சென்றுகொண்டு இருக்கிறது. 

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய தி.மு.க பிரமுகர் ராதாகிருஷ்ணன் என்பவர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போலி மதுபானம் தயாரிப்பதில் அரசியல் பின்னணி அதிகம் உள்ளது. இங்குள்ள கலால்துறை எந்தவிதமான குற்றங்கள் நடந்தாலும் அதைப்பற்றி ஆராய்வதே கிடையாது. அந்த வாகனத்தையும், அதனை ஓட்டி வந்த டிரைவரை மட்டுமே குற்றவாளியாக சேர்க்கின்றனர். புதுச்சேரி மாநிலத்திலும் போலி மதுபானங்கள் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அதனை முதலமைச்சர் உடனடியாக உணர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மேலும் முதலமைச்சரும், துணைநிலை ஆளுநரும் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக நீதி விசாரணைக்கு உட்படுத்தி இந்த போலி மதுபானம் கடத்தல், தயாரித்தல், கஞ்சா விற்பனை போன்ற விவகாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Aiadmk Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment