புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று (மார்ச் 5) அ.தி.மு.க தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, “நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தை முதலமைச்சர் அவர்கள் உடனடியாக கூட்ட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைந்ததில் இருந்து இக்கூட்டம் கூட்டப்படாததால் வாக்களித்த மக்களுக்கு தேர்தல் கால மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தேவையான உள்கட்டமைப்பு வசதி, அவசியமான நலத்திட்டங்கள், வருவாய் பெருக்கம், நிதி கசிவை தடுத்தல், நிதி மேலாண்மையை கட்டுக்குள் வைத்தல், மாநில முதல்வரின் எண்ணங்கள் மக்களை சென்றடையும் விதத்தில் உரிய நிர்வாக சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல ஆக்கப்பூர்வமான விசயங்கள் பட்ஜெட்டிலும், சட்டமன்ற நடவடிக்கைகளிலும் இடம்பெற வேண்டும்.

சிலிண்டருக்கு மாதம் ரூ.500 மானியம்
புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் நிதியுதவியும், மாநில வருவாயும் திருப்திகரமான நிலையில் உள்ளதால் வீட்டு உபயோக மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயர்வினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ளது போன்று சமையல் எரிவாயுவுக்கு மானிய உதவியை அரசு இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். சமையல் எரிவாயு பயன்படுத்தும் தகுதியான அனைத்து குடும்பத்தினருக்கும் மாதம் ரூ.500 சிலிண்டர் மானியமாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவிக்க வேண்டும் என அ.தி..முக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
கடற்கரை பகுதி சுற்றுலாவை மேம்படுத்தும் விதத்தில் உப்பளம், வம்பாகீரபாளையம் முகத்துவார பகுதிகளில் இருந்து வீராம்பட்டினம் கடற்கரை பகுதிக்கு சாலை மார்க்கமாக செல்வதற்கு கடற்கரை முகத்துவார பகுதியில் சுமார் 200 மீட்டர் நீலத்திற்கு கடலின் மீது பாலம் அமைக்க வேண்டும். இதன் மூலம் புதுச்சேரி நகர பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள் கடற்கரை சாலை வழியாக பாலத்தை கடந்து மிகப்பெரிய அளவில் பரந்து விரிந்து கிடக்கும் வீராம்பட்டினம் கடற்கரை பகுதிக்கு செல்வார்கள். இதன் மூலம் சுற்றுலா மேம்படுத்தப்படும், மாநில வளர்ச்சியும் அதன் மூலம் பெருகும். குறிப்பாக அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதியும், வீராம்பட்டினம் பகுதியும் வளர்ச்சியடையும்.
பொதுவிநியோக திட்டம் மூலம் புதிய ரேஷன் கடைகளை திறந்து மக்களுக்கு தேவையான வீட்டு உபயோக உணவு பொருட்களான எண்ணெய், பருப்பு வகைகள், மாவு வகைகள், மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசியமான உணவு பொருட்களை மானிய விலையில் விற்பனை செய்ய அரசு இந்த பட்ஜெட்டில் உரிய வழிவகை கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தில் விடியா தி.மு.க அரசின் தவறான தொழிலாளர் விரோத கொள்கையினால் வடமாநில தொழிலாளர்கள் பயத்துடன் தமிழகத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற சூழ்நிலை புதுச்சேரியில் ஏற்படாத வண்ணம் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். வடமாநில தொழிலாளர்களின் பிரதிநிதிகளை தொழிலாளர் துறை செயலாளர் அழைத்து பேச வேண்டும்” என்று கூறினார்.
இந்த நிகழ்வின் போது மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில கழக இணைச் செயலாளர் கணேசன், மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/