புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகளில் வாக்களித்த மக்கள் இந்த அரசால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன், ”புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி 3 ஆண்டுகள் முடிவடைந்து 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகளில் வாக்களித்த மக்கள் இந்த அரசால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட ரேஷன் கடைகள் திறக்கப்படவில்லை. அத்தியாவசிய உணவு பொருட்கள் மானிய விலையில் வழங்கும் பொது விநியோகத் திட்டம் 4 ஆண்டுகள் ஆகியும் துவங்கப்படவில்லை. எட்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
சுற்றுலா என்ற பெயரில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கஞ்சா உள்ளிட்ட சர்வதேச போதை பொருட்களை கடத்தி வர ஏதுவாக புதுச்சேரி உள்ளது. அதை கட்டுப்படுத்த அரசுக்கு எண்ணம் இருந்தால், வெளி மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எதற்காக வருகிறார்கள் என்று ஆராய உடனடியாக இ-பாஸ் முறையை இங்கும் அமல்படுத்த வேண்டும்.” இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“