புதுச்சேரி மாநில அதிமுக கழக செயலாளர் அன்பழகன் இன்று (ஆக.24) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “புதுச்சேரி மக்களின் நீண்ட நெடுநாள் கோரிக்கையான மாநில அந்தஸ்து பிரச்சனைக்கு மதிப்பளித்து கழக மாநாட்டில் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்த கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள்.
புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு தேவையான நல்ல பல்வேறு திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பு துணைநிலை ஆளுநர் மாளிகையில் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிக்கை வெளி வருகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பின்னுக்கு தள்ளும் இதுபோன்ற நிலை தொடந்து வருகிறது. மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ள இந்த சூழ்நிலையில் மாநிலத்தில் பாஜக கூட்டணி உள்ள நிலையில் அரசின் நிர்வாகம் சம்பந்தமாக அனைத்து அதிகாரங்களையும் தலைமைச் செயலாளர் முழுமையாக ஏற்றுக் கொண்டு அரசின் அறிவுறுத்தல்களை செயல்படுத்தாமல் இருப்பதை பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது சரியான நிகழ்வாக இல்லை.
அதே போன்று ஒவ்வொரு நாளும் மு.க. ஸ்டாலின் வாய் திறந்தால் மத்திய அரசு குறித்து பொய்யான கருத்துக்களை கூறி வருகிறார்.
ஸ்டாலின் அவர்கள் இந்திய அளவில் உள்ள பல்வேறு கட்சிகள் மத்தியில் தானும் ஒருவர் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமரை கேவலப்படுத்தும் விதத்தில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதை புதுச்சேரி பாஜக வேடிக்கை பார்ப்பது சரியல்ல” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“