செய்தி: பாபு ராஜேந்திரன்
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று மாலை தலைமை கழகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
புதுச்சேரி மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாநில அந்தஸ்து பிரச்சனை தற்போது மக்களின் பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாநில அந்தஸ்து பெரும் விஷயத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரசும் இன்று வரை இரட்டை வேடம் போடுகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கோவா, மணிப்பூர், நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட பல வடகிழக்கு மாநிலங்கள் மாநில அந்தஸ்தை பெற்றனர்.
ஆனால் இன்றுவரை புதுச்சேரி மாநிலத்திற்கு மத்தியில் எந்த தேசிய கட்சி ஆட்சியில் இருந்தாலும் மாநில அந்தஸ்து வழங்கும் பிரச்சனையில் பாரா முகமாக உள்ளன. ஒரு காலத்தில் மத்திய அரசின் நிதி உதவி 80% ஆகவும், மாநில அரசின் நிதி ஒதுக்கீடு 20% ஆக இருந்த நிலை மாறி மத்திய அரசின் நிதி உதவி 20% ஆகவும் மாநில அரசின் நிதி 80% ஆகவும் திட்டங்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. அந்த அளவில் புதுச்சேரி மாநிலத்தில் சொந்த வருவாய் என்பது தன்னிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து என்பது அவசியமான ஒன்றாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு செயல்படும் மாநிலத்தில் அந்த அரசுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படுவது என்பது ஜனநாயகம் ஆகும். ஆனால் புதுச்சேரி மாநிலத்தை பொருத்தமட்டில் இன்று வரை மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு துறை போன்று உள்ளது. இதனால் அறிவிக்கப்படும் எந்த திட்டத்தையும் அரசால் உடனுக்குடன் செயல்படுத்த முடியவில்லை.
காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட முடியவில்லை. திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்த முடியாததால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. 1998-ஆம் ஆண்டு மத்தியில் பிஜேபி ஆட்சி இருந்தபோது அப்பொழுது பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் எங்களது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் பிஜேபியின் மத்திய அமைச்சரவையில் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் மாநில அந்தஸ்து பிரச்சனை கிடப்பில் போடப்பட்டது.
1998-ஆம் ஆண்டு மத்தியில் பிஜேபி ஆட்சியில் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது மத்தியில் பிஜேபி ஆட்சி உள்ளதால் மாநில அந்தஸ்து புதுச்சேரி மாநிலத்திற்கு வழங்குவதில் மத்திய அரசின் முடிவு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டியது பிஜேபியின் கடமையாகும். பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் எண்ணற்ற அமைப்புகள் மாநில அந்தஸ்து சம்பந்தமாக தொடர் போராட்டங்கள் நடத்திவரும் இந்த சூழ்நிலையில் மாநில அந்தஸ்து பிரச்சனையில் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இதிலும் கபட வேடம் போடுகின்றன.
18 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் பிஜேபி மற்றும் காங்கிரஸ் உடன் ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்ற கழகம் ஏன் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து கிடைக்க வழி செய்யவில்லை. அதேபோன்று மத்திய இணையமைச்சராக இருந்த முன்னாள் முதலமைச்சர் திரு நாராயணசாமி 16-4-2014 அன்றைய தினம் தான் போட்டியிட்ட பாராளுமன்ற தேர்தலின் போது ஏனாம் மக்களிடையே ஒரு உறுதிமொழி கடிதம் கொடுத்தார்.
தான் கையெழுத்திட்ட அந்த கடிதத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் யூனியன் பிரதேசமாக மட்டுமே நீடிக்க வேண்டும் என்பதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இது ஏனாம் மக்களுக்கு நான் செய்யும் அர்ப்பணிப்பு என் வாழ்நாள் முழுவதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை அனுமதிக்க மாட்டேன் என்று அந்த ஒப்புதல் கடிதத்தில் நாராயணசாமி தெரிவித்து இருந்தார். அன்றைய அவரது கருத்து காங்கிரஸ் கருத்தாக அறியப்பட்டது.
ஆனால் இன்றைக்கு அதே நாராயணசாமி அவர்கள் ஏன் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசும் மாநில அரசும் பெறவில்லை என்று குப்பாடு போடுகிறார். மாநில அந்தஸ்து என்பது நம் மாநில உரிமை பிரச்சனையாகும். அதில் தயவு செய்து எந்த அரசியல் கட்சியும் அரசியல் செய்ய வேண்டாம் மாநில அந்தஸ்து குறித்து அதிமுக கழகம் கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் அனுமதி பெற்று புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்காக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றது.
இப்பபிரச்சனையில் திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரசும் போலித்தனமான அரசியல் நாடகத்தை அரங்கேற்றாமல் மாநில மக்களை நலனுக்காக அமைதி காக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பேட்டியின் போது மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம், புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார்,மாநில கழக துணை செயலாளர் நாகமணி,மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil