அட்டவணை இனத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சராகும் உரிமையை தடுத்து நிறுத்தியுள்ள தி.மு.க-விற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்ல பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். என புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கூறினார்.
புதுச்சேரி அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
தமிழகத்தை பொறுத்தமட்டில் 234 சட்டமன்ற தொகுதியில் உள்ள நிலையில் சுமார் 18 சதவீதம் அட்டவணை இன மக்களுக்காக 44 எஸ்.சி தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. சமூக நீதி பற்றி பேசும் ஸ்டாலின் அவர்கள் தனது அமைச்சரவையில் மொத்தமுள்ள 35 பேரில் அட்டவணை இனத்தவருக்கு 18 சதவீதம் என்ற அடிப்படையில் 6 அட்டவணை இனத்தவருக்கு அமைச்சர் பதவி வழங்கி இருக்க வேண்டும். அப்படி வழங்கியிருந்தால் அது சமூக நீதி. ஆனால், தற்போது அவரது அமைச்சரவையில் ராசிபுரம், தாராபுரம், திட்டக்குடி ஆகிய தொகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். இது சமூக அநீதியாகும்.
ஒரு அமைச்சரவையில் பதவி வழங்குவது என்பது முதலமைச்சரின் உரிமை. ஆனால் எப்படிபட்ட முதலமைச்சராக இருந்தாலும் தனக்கு ஒரு வாய்ப்புகள் வரும் போது அந்த வாய்ப்புகளைள பயன்படுத்தி பட்டியலினத்தவரின் உரிமையை வழங்குவது சமூக நீதிக்கு அழகாகும். ஆனால் அதை செய்யாமல் பட்டியலின மக்களுக்கு துரோகத்தை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது அமைச்சரவையில் இழைத்துள்ளார்.
பல நேரங்களில் சமூக நீதியை காக்க வேண்டும் என்றால் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் அட்டவணை இனத்தவருக்கு 18 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பேசி வருகிறார். ஆனால், தான் முதலமைச்சராக உள்ள தனது அமைச்சரவையில் 6 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டிய ஸ்டாலின் அப்படி வழங்காமல் 3 நபர்களுக்கு மட்டும் அமைச்சர் பதவியை வழங்கியுள்ளார். இதுதான் சமூக நீதியா? இது தான் திராவிட மாடல் ஆட்சியா? அட்டவணை இனத்தவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை மறுப்பது எந்தவிதத்தில் நியாயம்.
அட்டவணை இன மக்களுக்காக பாடுபடுவதாக கூறி வரும் விசிக தலைவர் திருமாவளவன் இந்த அநீதியை ஏற்றுக்கொள்கிறாரா? இல்லையென்றால் அட்டவணை இன மக்களின் உரிமைக்காக அட்டவணை இனத்தவறுக்கு துரோகம் செய்யும் கூட்டணியில் இருந்து திரு திருமாவளவன் அவர்கள் வெளிவர வேண்டும்.
தனது அமைச்சரவையில் அட்டவணை இனத்தை சேர்ந்த மேலும் 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்க அமைச்சர்களாக நியமிக்க வாய்ப்பு இருந்தும் அதை செய்யாமல் அந்த இனத்தை சேர்ந்த மக்களுக்கு துரோகம் செய்யும் தமிழக திராவிட முன்னேற்ற கழக தலைவர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு சமூக நீதியை பற்றி பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. ஜாதி, மத ரீதியாக பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம் ஆதாயம் தேட முயற்சிப்பவர் தி.மு.க. மற்றும் அதன் தலைவர் ஸ்டாலின் அவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சமூக நீதிக்காக ஆட்சியில் இருக்கும் போதும், ஆட்சியில் இல்லாத போதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே இந்திய நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை நிலைநாட்டி சமூக நீதி காத்த வீராங்கணையாக எங்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளை பின்பற்றி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் தனது ஆட்சியில் அட்டவணை இன மக்களுக்காக அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்திகொடுத்தார். தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் இல்லை என்றாலும் சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருபவர் எங்களது கழகத்தின் பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
அட்டவணை இனத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சராகும் உரிமையை தடுத்து நிறுத்தியுள்ள தி.மு.க.விற்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்ல பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் புதுப்பித்தல் பணி கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணையின்படி புதுச்சேரியில் புதிய உறுப்பினர் சேர்க்கை துவங்கியுள்ளோம். புதுச்சேரியல் இரண்டிலிருந்து 3 லட்சம் வரை உறுப்பினர்கள் சேர்க்க இலக்காக நிர்ணயித்து புதுச்சேரி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் விண்ணப்பம் வழங்கி உள்ளோம். கழக பொறுப்பாளர்கள் கழகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நியாயமான முறையில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.