/indian-express-tamil/media/media_files/2025/11/03/screenshot-2025-11-03-180856-2025-11-03-18-09-16.jpg)
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது: கழக கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்குத் தகாத விதத்தில் செயல்படும் எவராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு முழு அதிகாரம் வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், கட்சிக்குத் துரோகம் விளைவிக்கும் விதத்தில் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியதை புதுச்சேரி அதிமுக வரவேற்கிறது என்றார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது: உலகளவில் இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது. தேர்தல் ஆணையத்தின் வெளிப்படையான மற்றும் நேர்மையான செயல்பாடுகளே அதன் அடிப்படை காரணம். அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திட்டமிட்டு தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பெற முயற்சி செய்து வருகிறார். அதேபோல் புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள், “ஆதார் மையத்தில் 80 ரூபாய் கொடுத்து பெயர்கள் நீக்கப்படுகின்றன” என்று கூறி மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும். இன்னும் தேர்தல் ஆணையம் அந்தப் பணியை முழுமையாகத் தொடங்கவில்லையென்றும், இதற்கு முன்பாகவே அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய பொய்யான தகவல்களைப் பரப்புவதாகவும் தெரிவித்தார். இதுபோன்ற நபர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால், யாரும் மக்களுக்கு சேவை செய்ய அமைப்புகள் அல்லது அரசியல் கட்சிகளை தொடங்கலாம். ஏழை, எளிய மக்களுக்கு உதவுவது மனிதாபிமானம் சார்ந்த செயல். புதுச்சேரியில் கடந்த ஓர் ஆண்டு காலமாக சிலர் அரசியல் சார்போடு அல்லது அதன் புறம்பாகவும் மக்களுக்கு உணவு, பரிசுப் பொருட்கள், அவசிய தேவைகள் போன்றவற்றை வழங்கி வருகிறார்கள். இது தேர்தல் நேரத்தில் மக்களால் மதிப்பிடப்படும். ஆனால், இத்தகைய மனிதாபிமான உதவிகளை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கேவலமாக விமர்சிப்பது, அந்த உதவிகளைப் பெறும் மக்களை இழிவுபடுத்துவது முறையல்ல.
அதிமுக மாநில செயலாளர் மேலும் கூறியதாவது: திமுக அமைப்பாளர் சிவா மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மற்றவர்களை குற்றம் கூறும் முன் தங்களது செயல்களைப் பார்க்க வேண்டும். நாராயணசாமி அவர்கள் சட்டமன்ற உறுப்பினரையே விலை கொடுத்து வாங்கியவர். திமுக அமைப்பாளர் சிவா அவர்கள் உருளையன்பேட்டை தொகுதியில் தங்கக் காசு வழங்குவதாக வாக்குறுதி அளித்து மக்களிடம் வாக்கு வாங்கி, பின்னர் அதை நிறைவேற்றாமல் வில்லியனூர் தொகுதிக்குத் தப்பிச் சென்றார். இப்படி மக்களை ஏமாற்றியவர்கள், இன்று மக்களுக்கு உதவுபவர்களை இழிவுபடுத்தும் உரிமை அவர்களுக்கு இல்லை என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுகவினர் எப்போதும் மக்களுக்காகச் செயல்படுகிறார்கள். பரிசுப் பொருட்கள் வழங்குபவர்களின் பணவழக்கை விசாரிப்பது வருமான வரித்துறையின் கடமை. அதை விடுத்து திமுகவினரும் நாராயணசாமியும் அவர்களை விமர்சிப்பது தேவையற்றது. பிறர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்கு முன் தாங்கள் சீராக இருக்க வேண்டும். ஏழை மக்களுக்கு உதவுபவர்களை ஏன் கெடுக்கிறீர்கள் என்றார்.
இதேபோல், புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி தடைப்பட்டு வருகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் இல்லை. மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படவில்லை. பால் உற்பத்தி மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன. இவற்றை திருத்துவதற்கான முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். இவை அனைத்தும் முன்பே அதிமுக கேட்டு வந்த கோரிக்கைகளே என்றும், தற்போதைய அரசும் அதே தவறான பாதையில் செல்வதாகவும் கூறினார்.
அவர் முடிவில் கூறியதாவது: “நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும், அரசு தவறான பாதையில் செல்லக் கூடாது என்பதைக் குறிப்பிடுவது எங்கள் கடமை” என்றார்.
இவ்வழக்கில் மாநில கழக இணைச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் கணேசன், நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள் நாகமணி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாபுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us