புதுவை ஏடிஎம் கார்டு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்துருஜியின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
புதுவையில் பலரது வங்கி கணக்கில் இருந்து சமீப காலமாக பல கோடி பணம் மாயமானது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அதிமுக பிரமுகர் சந்துருஜி, என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் சத்யா ஆகியோரை தேடி வருகின்றனர்.
சந்துருஜி, புதுச்சேரி அதிமுக நகர கமிட்டி உறுப்பினராக உள்ளார். 2016 சட்டமன்றத் தேர்தலில் முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிட முயற்சித்தார். அவரை பிடித்தால் பல அரசியல் பிரமுகர்கள் சிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சந்துருஜியை தேடப்படும் குற்றவாளியாக போலீஸ் அறிவித்துள்ளது. அவரது புகைப்படத்துடன், அவரது விவரம் அடங்கிய நோட்டீஸ் புதுச்சேரி, தமிழக காவல்நிலையங்களில் ஓட்டப்பட்டுள்ளது. இவரை பற்றி தகவல் தெரிந்தால் புதுவை சிபிசிஐடி போலீஸுக்கு தெரிவிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்துருஜி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.