புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுக்காத ஆளும் அரசை கண்டித்தும் புதுச்சேரியில் அ.தி.மு.க இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தில் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை. அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா போதையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 9 வயது சிறுமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும் எனக் கூறியும், புதுச்சேரியில் அதிகமாக விற்கப்பட்டு வரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்க தவறிய ஆளும் பா.ஜ.க மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்தும் புதுச்சேரியில் இன்று (மார்ச் 8) ஒரு நாள் அ.தி.மு.க சார்பிலும், இந்தியா கூட்டணி சார்பிலும் தனித்தனியாக முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள வணிகம் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. குறிப்பாக வர்த்தகதளம் என்று அழைக்கப்படும் அண்ணா சாலை, காந்திவீதி, நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை. அதேபோல் ஆட்டோ, டெம்போக்களும் இயக்கப்படவில்லை. அரசு பேருந்துகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய கூட்டணி சார்பில் இன்று நடந்த பந்து போராட்டத்தில் கவர்னர் மாளிகை முற்றுகையிட்டபோது போலீசாருக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“