புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம். இவர் ஒரு சிறந்த விவசாயி. இவர் தனது சொந்த நிலத்தில் மா, பலா, வாழை பயிர் இடுவது வழக்கம். இவர்கள் தோட்டத்தில் முக்கனிகளும் செழிப்பாக வளர்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
இந்த நிலையில் இப்படி தன்னுடைய நிலத்தில் நன்கு விளைந்த பலாப்பழத்தை நண்பர்களுக்கும், தொகுதி மக்களுக்கும் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவார்.
சட்டமன்றம் கூடியிருக்கும் போது கூட முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு பலாப்பழத்தை கொடுப்பதை ஒரு வாடிக்கையாக வைத்துள்ளார் .
2011 முதல் இன்று வரை 15 ஆண்டுகளாக தனது நிலத்தில் விளையும் பலா பழத்தை கொடுத்து வருகிறார். அதேபோன்று இன்று தனது நிலத்தில் விளைந்த முக்கனியில் ஒன்றான பலாப்பழத்தை முதல்வர் அறைக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் எடுத்து வந்து முதல்வர் ரங்கசாமி இடம் வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்டு முதல்வர் ரங்கசாமி பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரத்தை ஆசிர்வதித்தார். முதல்வர் சாப்பிடுவதற்காக மூன்று பலாப்பழங்களை கொடுத்தார். அதன் பின்பு சபாநாயகர் அமைச்சர் என அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் பலாப்பழத்தை இன்று வழங்கினார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, என் சொந்த நிலத்தில் என் கையால் பயிரிட்டு எந்தவிதமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து அடிக்காமல் விளைந்த பலாப்பழத்தை கடந்த 15 ஆண்டுகளாக முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் என அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் கொடுத்து வருகிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய மன திருப்திக்காக கொடுக்கிறேன் என்றார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“