பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
புதிய கட்டிடத்தில் கடைகள் தருவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதவை புதிய பேருந்து நிலைய வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது*
புதுவையில் ரூ.30 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் நவீன மயமாக்கப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக பேருந்து நிலையத்தின் மைய பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 500 சதுர மீட்டரில் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக பேருந்து நிலையத்தில் 5 ஆயிரம் சது ரமீட்டர் அளவுக்கு தடுப்பு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் நேற்றைய தினம் இப்பணியால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பேருந்து நிலைய ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று புதிய பேருந்து நிலையத்தின் உட்புறம் உள்ள கடை வியாபாரிகள் கடைகளை அடைத்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு மீண்டும் புதிய கட்டிடத்தில் கடைகள் தருவதை உறுதி செய்ய வேண்டும். கட்டுமான பணிகள் முடியும் வரை மாற்று இடம் தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/