புதுச்சேரியில் இருந்து சபரிமலைக்கு தரிசனம் செய்ய சென்றபோது, திருவனந்தப்புரத்தில் வாங்கிய லாட்டரிக்கு 20 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
கேரள அரசு கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது. இதில் முதல் பரிசாக ரூ.20 கோடி அறிவிக்கப்பட்டது. இந்த லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த 33 வயதான தொழிலதிபர் ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சபரிமலை கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலிலும் வழிபாடு நடத்தியுள்ளார். அப்போது, கோயில் அருகே இருந்த சப் ஏஜெண்ட் லாட்டரி டிக்கெட் கடையில், லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.
தற்போது அந்த லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி பரிசு விழுந்துள்ளது. இதையறிந்த அந்த தொழிலதிபர், நேரடியாக கேரள அரசின் லாட்டரி இயக்குனரகத்தை தொடர்பு கொண்டு தனது லாட்டரி டிக்கெட்டை சமர்ப்பித்துள்ளார். அவருக்கு வரி மற்றும் ஏஜென்ட் கமிஷன் 40 சதவீதம் போக 12.60 கோடி ரூபாய் கிடைக்கும். இந்நிலையில், பாதுகாப்பு கருதி அவர் தனது பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“