Advertisment

புதுச்சேரி ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து; 8 பேர் படுகாயம்

புதுச்சேரி ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி; உரிய நடவடிக்கை எடுக்க தி.மு.க வலியுறுத்தல்

author-image
WebDesk
New Update
Puducherry chemical factory accident

புதுச்சேரி ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி; உரிய நடவடிக்கை எடுக்க தி.மு.க வலியுறுத்தல்

புதுச்சேரி ரசாயன தொழிற்சாலையில் கொதிகலன்கள் வெடித்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்து 6 பேர் உயர் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை காலாப்பட்டு பகுதியில் சாசன் என்ற பெயரில் மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது. சில ஆண்டுகளாக சோலாரா ஆக்டிவ் பார்மா என்ற பெயரில் இந்த ரசாயன ஆலை இயங்கி வருகிறது.

இங்கு ஒரு ஷிப்ட்டிற்கு 300 பேர் என வேலை செய்யும் சூழ்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு ஷிப்ட் முடித்து தொழிலாளர்கள் மாறும் நேரத்தில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கும் இந்த சத்தம் கேட்டுள்ளது. சில நிமிடங்களில் தொழிற்சாலையில் தெற்கு பக்கம் கட்டிடத்தில் 3 பாய்லர்கள் இருந்த இடத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டது. எப்போதும் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் சூழ்நிலையில் ஷிப்ட் மாற்றும் நேரத்திற்கு உள்ளே வந்த 8 தொழிலாளர்கள் தீயில் பாதிக்கப்பட்டு வெளியே ஓடி வந்தனர்.

உடனே அவர்களுக்கு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ்கள் வர வரவழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்குள் தகவல் அறிந்து தொழிற்சாலைக்குள் வந்த ஒரு கும்பல் நிர்வாகத்தை கண்டித்து வரவேற்பறையை அடித்து நொறுக்கியுள்ளது. மேலும் விபத்து நடந்த கட்டிடத்திற்கு சென்று அங்குள்ள கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது. இத்தகவல் அறிந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அனைவரையும் வெளியேற்றினார்கள்.

ரசாயன கொதிகலன்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 2 இறந்திருப்பதாகவும் பலர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல் வேகமாக காட்டுத் தீ போல் பரவியது. ஆனால் 8 பேர் மட்டுமே ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 பேர் உயர் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தீயணைப்பு துறையினர் தீ விபத்து எப்படி நடந்தது என்றும், அறிவியல்-தொழில்நுட்ப துறையினர் சுற்றுசூழல் பாதித்துள்ளதா என்றும் விசாரணையை துவக்கியுள்ளனர்.

இந்தநிலையில், சொலரா கெமிக்கல் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் தொழிற்சாலை வாயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட நடந்த இடத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், எல். சம்பத் ஆகியோர் இன்று காலை நேரில் சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் சொலரா பார்மா (சாசன் கெமிக்கல்) தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியத்தாலும், அரசு அதிகாரிகளின் மெத்தனத்தினாலும் கடந்த ஆண்டு இத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள். அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு ஆதரவாக தொழிலாளர் துறையும், மாவட்ட நிர்வாகமும் செயல்பட்டதால் அந்த உயிரிழப்பிற்கு தகுந்த நியாயம் கிடைக்காமல் போனது. உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நாங்கள் ஆதரவாக நின்றதால்தான் அந்த குடும்பத்திற்கு நிவாரணமாவது பெற்றுக்கொடுக்க முடிந்தது.

ஆளும் அரசையும், அதிகாரிகளையும் கையில் வைத்துக்கொண்டு இந்த தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கான எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் மிகவும் மோசமாக நடத்தி வருகிறது. தொடர்ந்து அரசு இந்த தொழிற்சாலையை ஆய்வு செய்யாமல் இருந்த காரணத்தினால் நேற்று மேலும் ஒரு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பாய்லர்கள் வெடித்து பல தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உண்மையில் எவ்வளவு தொழிலாளர்கள் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று முழு விபரம் தெரிவிக்கப்படாமல் குழப்பமான நிலை தொடர்கிறது. மேலும் அத்தொழிற்சாலையில் ரசாயன கசிவால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று, அதன் காரணமாக தொழிற்சாலையை சுற்றி வசித்த மக்கள் இரவோடு, இரவாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலாப்பட்டில அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

40 பாய்லர்கள் செயல்படும் அந்த தொழிற்சாலையில் இரண்டு பாய்லர்கள் வெடித்ததற்கே இவ்வளவு சேதாரம் ஏற்பட்டு இருக்கிறதை பார்த்தால் மனம் பதறுகிறது. ஆனால் இவ்வளவு பெரிய விபத்து நடந்தும் அரசும், அதிகாரிகளும் அலட்சியமாக இருப்பது வேதனை அளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும்.

இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கெமிக்கல் கழிவுகள் எல்லாம் கடலில் கலந்து நீர் ஆதாரம் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து விபத்துக்கள் நடப்பதாலும், ரசாயன கழிவு வெளியேறுவதாக தகவல் வருவதாலும் மக்கள் அங்கு அச்சத்துடன் வசிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அரசு கண்காணிப்பில் இருந்தும் இதுபோன்ற தவறுகள் நடப்பதை இனியும் அனுமதிக்க கூடாது.

தொழிற்சாலையை சுற்றி 10 மீனவ கிராம மக்கள் வசிக்கின்றனர். ஒன்றிய பல்கலைக் கழகம், நவோதயா பள்ளி, சிறைச்சாலை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இதையெல்லாம் அரசு கவனத்தில் கொண்டு, தொழிற்சாலையை முழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும்.

இந்த கோர விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை செய்த மற்றும் செய்ய வேண்டிய நாட்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அத்தொழிற்சாலையை திறப்பதாக இருந்தால் அப்பகுதி மக்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தார்போல் அரசு முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு சிவா தெரிவித்தார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmk Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment