புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம், முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தை பிறந்தவுடன் 50,000 ரூபாய் நிரந்தர வைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளுடன் 2023 -24 ஆம் ஆண்டுக்கான வரி இல்லா பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
புதுச்சேரி 15-வது சட்டப் பேரவையின் 4-வது கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. 3-ம் நாளான இன்று நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ரூ.11,600 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதையும் படியுங்கள்: மு.க. ஸ்டாலினால் எடப்பாடி உயிருக்கு ஆபத்து.. புதுச்சேரி அ.தி.மு.க. குற்றச்சாட்டு
”படைகுடிகூழ் அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு”
என்ற திருக்குறளை கூறி சட்டப்பேரவையில் தனது உரையை தொடங்கினார் முதலமைச்சர் ரங்கசாமி. படையும், செல்வமும், குடிமக்கள், அமைச்சும், நட்பும், அறனும், என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்புகளையும் உடையவன் அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் என விளக்கம் அளித்து தனது உரையை துவக்கினார்.
முதலமைச்சர் ரங்கசாமி வாசித்த பட்ஜெட் உரையில் முக்கிய அம்சங்கள்
புதுச்சேரியில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் இலவச மடிக்கணினி வழங்கப்படும். அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை CBSE பாடத்திட்டம் கொண்டுவரப்படும்.

மீனவ முதியோருக்கு ஓய்வூதியம் 70-79 வயதுள்ளவர்களுக்கு வழங்கப்படும், 3000 ரூபாய் 3500 ஆக உயர்வு உயர்த்தப்படும். இதன் மூலம் 2000 மீனவர்கள் பயன் அடைவார்கள்.
புதுச்சேரியில் உலக தமிழ் மாநாடு நடத்தப்படும்.
காரைக்கால் அக்கரை வட்டத்தில் நவீன சிறைச்சாலை அமைக்கப்படும்.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இந்த ஆண்டு 2000 வீடுகள் கட்டப்படும். காமராஜர் வீடு கட்டும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனடையாதவர்கள் இதில் பயன்பெறலாம். இதில், தாழ்த்தப்பட்டோருக்கு 5 லட்சம் ரூபாய், பிற்படுத்தப்பட்டோருக்கு 3.5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்.
புதுச்சேரியில் உள்ள கோவில்களில் ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள், நகைகள் ஆகியவை மின்னணு மயமாக்கப்படும், அதனை பொதுமக்கள் பார்க்கின்ற அளவிற்கு அமைக்கப்படும்.
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டிற்கு இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் சுற்றுலா நகரம் அமைக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு சுற்றுலா சங்கம் ஏற்படுத்தப்படும்.
புதுச்சேரியில் இயங்கக்கூடிய பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதில் 50 மின்சார பேருந்துகள், 50 டீசல் பேருந்தாலும் வாங்கப்படும். மேலும் 10 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது.

பெண் குழந்தைகள் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தை பிறந்தவுடன் 50,000 ரூபாய் தேசிய மயக்கபட்ட வங்கியில் 18 வருட காலத்திற்கு நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப உணவு பங்கிட்டு அட்டைதாரர்களுக்கும் பயன்பெறும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு 300 ரூபாய் வீதம் வருடத்திற்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ஒன்றுக்கு கூடுதலாக 126 கோடி செலவு ஆகும்.
12 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படாமல் வரியில்லா பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது உரையை முதலமைச்சர் ரங்கசாமி 83 நிமிடம் பட்ஜெட் உரை வாசித்தார்.
2023 – 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் தாக்கல் செய்து முடிந்தவுடன் சபாநாயகர் செல்வம் பேரவையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.
செய்தியாளர்: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil