புதுச்சேரி தொகுதியில் கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளது, பா.ஜ.க போட்டியிடுவதை உறுதி செய்துள்ளது.
புதுச்சேரி மாநில என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 14 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரும், மாநில முதலமைச்சருமான ரங்கசாமி கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய முதல்வர் ரங்கசாமி, நமது ஆட்சியில் சொன்னதை செய்துள்ளோம்; அதை மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும். புதுச்சேரி அரசானது அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் ஒன்றிய அரசின் நிதி பெற்று மாநில மக்களுக்கான வளர்ச்சிகளை தொடர்ந்து செய்து வருகிறது எனத் தெரிவித்தார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்க்கட்சியினர் ஏதாவது ஒரு குறை கூற வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதாக தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி, வருகின்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். வரும் நாடாளுமன்ற தேர்தலில், என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, அனைத்து தொகுதியில் உள்ள நிர்வாகிகள் முழு மூச்சில் இறங்கி வேலை செய்து, கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெற வைப்பது நமது கடமை. அதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும் என தெரிவித்தார். கட்சியை பலப்படுத்த 5 பேர் கொண்ட உயர்மட்ட குழு மற்றும் 10 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்படும் என்றும் ரெங்கசாமி தெரிவித்தார்.
இதனால், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரேயொரு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க போட்டியிடுவதை முதலமைச்சர் ரங்கசாமி உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“