புதுச்சேரியில் போதை கும்பல் நடமாட்டத்தை கட்டுப்படுத்த இரவில் ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீசாருக்கு முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
புதுவையில் மது போதையில் இரவில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் சாலைகளில் போதை கும்பல் அட்டகாசம் செய்து வருவது அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன் போதை கும்பல் அட்டகாசத்தால் என்ஜினியர் ஒருவர் உயிரிழந்தார். இது புதுவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூட்டணி கட்சியான அ,தி.மு.க இச்சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் புதுவையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும் இரவு முழுவதும் மதுக்கடைகள் செயல்படுவதாகவும், ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி ரத்து செய்ய வேண்டும் என்றும் முதல்வரை வலியுறுத்தினர்.
இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி, நகர பகுதி போலீஸ் அதிகாரிகளை நேற்று அழைத்து பேசினார். அப்போது, இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து நகர பகுதியில் நள்ளிரவிலும் போலீசார் ரோந்து செல்ல வேண்டும். இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் மது போதையில் வாகனங்களில் சுற்றி வருபவர்களை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். பார் உரிமையாளர்கள் நேரக் கட்டுபாட்டை கடைபிடிக்க வேண்டும் எனக் கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“