scorecardresearch

‘முழு அதிகாரம் இல்லை, நிர்வாக நிலை உங்களுக்கு தெரியும்’: எம்.எல்.ஏக்கள் கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதில்

புதுச்சேரி அரசுக்கு முழு அதிகாரம் இல்லை என்பதை எம்.எல்.ஏக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் மாநில வருவாயினை உயர்த்தி நிர்வாகத்தை சமாளித்து வருவதாகவும் முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

Puducherry CM
Puducherry CM

புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன் கேள்வி எழுப்பினர். அவர் பேசுகையில், புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் லாஸ்பேட்டை தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் என்ன? டெண்டர் விடப்பட்டும் காலதாமதம் ஆவது ஏன்? பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது, லாஸ்பேட்டை தொகுதியில் சுத்திகரிப்பு நிலையம், சாலை மேம்பாடு, எல் வடிவ வாய்க்கால் அமைத்தல், பூங்கா புனரமைப்பு, சலவையாளர் நகர் மேம்பாடு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.

அப்போது எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ரமேஷ், சிவசங்கர், ஜான்குமார், நேரு ஆகியோர் எழுந்து, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடங்க காலதாமதம் ஆகிறது. பிற மாநிலங்களில் ஒட்டுமொத்த பணிகளும் முடிவடைந்துவிட்டது. நமது மாநிலத்தில் இன்னும் பணிகள் தொடங்கவே இல்லை. இதன்மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்து முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது, “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ. 1.600 கோடியில் பணிகள் நடந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது ரூ.256 கோடிக்கு கூட பணிகள் நடக்கவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. தலைமை செயலாளர் திட்டத்தை வேகப்படுத்தவில்லை. இதனால் காலதாமதம், விரயம் ஏற்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும், அரசுக்கும் சம்பந்தம் இல்லாத நிலை உள்ளது. திட்டத்தின் சேர்மன் தலைமை செயலாளர் தான். அவர்தான் திட்டத்தை இறுதி செய்கிறார். இதைப்பற்றி உறுப்பினர்களுக்கு ஏற்கனவே எல்லாம் தெரியும். இருப்பினும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம். பல பணிகளுக்கு பூஜை செய்துள்ளோம். நமது நிர்வாக நிலை என்ன? என்பது அனைவரும் வெட்ட வெளிச்சமாக அறிந்த உண்மை. முழு அதிகாரம் இல்லாத நிலையில்தான் உள்ளோம்.

கடந்த காலங்களில் மத்திய அரசு கூடுதலாக நிதி வழங்கியது. இந்த நிதி படிப்படியாக குறைந்து தற்போது 23 சதவீதத்திற்கு வந்துவிட்டது. இருப்பினும் மாநில அரசின் வருவாயை 61 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். எம்எல்ஏக்களுக்கு தொகுதி பணிகள் நடைபெற தொகுதி மேம்பாட்டு நிதி, பொதுப்பணித்துறை மூலம் நிதி வழங்குகிறோம். முக்கிய பணிகள் இருந்தால் அதை எம்எல்ஏக்கள் தெரிவிக்கலாம். மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம்” என்று கூறினார்.

செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Puducherry cm rangasamy reply to mlas questions in assembly