புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில் மகளை காப்போம் மகளுக்கு கற்பிப்போம் என்ற மத்திய அரசு திட்டத்தினை சிறப்பிக்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளை புதுவை மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடும் விதமாக கையெழுத்து பிரச்சாரம் உறுதிமொழி, ஊடகப் பிரச்சாரம், விழிப்புணர்வு பயிற்சி, திறன் மேம்பாடு, ஆவணப்படுத்துதல், வழியாக பல்வேறு செயல்பாடுகள் நடத்தப்பட்டது
இதன் தொடக்க விழா இன்று புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது .
இதில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனை படைத்த குழந்தைகளுக்கு விருதுகளையும் பாராட்டு சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து இந்த விழாவில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு ரூபாய் 250 செலுத்தி அரசு பராமரிப்பில் உள்ள 47 குழந்தைகளுக்கு அஞ்சலக புத்தகங்களை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார் .



தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, பெண்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி, பெண்களுக்கு சம உரிமை பாதுகாப்பு வழங்கப்படும். பெண்கள் வளர்ந்தால் தான் நாடு முன்னேற முடியும்.
பெண் பிள்ளைகள் பிறந்தாலே பெரும் சுமையாக நினைக்கும் காலகட்டங்கள் மாறி தற்போது பெண் பிள்ளைகள் படிப்பிலும் விளையாட்டிலும் சாதித்து வருகிறார்கள்.
பள்ளியில் இடைநிற்றல் என்பது இல்லை, பெண் குழந்தைங்களுக்கு அரசு தேவையான பாதுகாப்புகளை அளித்து வருகிறது பெண் கல்வியே நாட்டின் முன்னேற்றம் என்றார்.
பெண் குழந்தைகளுக்கு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் செல்வமகள் காப்பீட்டு திட்டத்தில் பெற்றோர்கள் செலுத்தும் வைப்பு நிதியுடன் சேர்ந்து அரசும் கூடுதலான நிதியை ஒதுக்கி செலுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மகளிர் மேம்பாட்டு துறையின் இயக்குனர் முத்துமீனா மற்றும் துணை இயக்குனர் அமுதா உள்ளிட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையை சேர்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர் மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“