/indian-express-tamil/media/media_files/2025/02/28/MJg7lzI1CHSMd68d5Df8.jpeg)
பிரச்சனைகளை பேசி தீர்க்காததால் புதுச்சேரியில் இருந்து தொழிற்சாலைகள் வெளியேறி வருவதாக முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை சார்பில் தொழில் நல்லுறவு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் இன்று நடைபெற்றது.
தொழிலாளர் நலத்துறை ஆணையர் நாராயண ரெட்டி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் சிறு, குறு தொழிற்சாலைகள் 1500 உள்ளது. இதில் 85 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரிய தொழிற்சாலைகள் சில வெளியேறி இருக்கலாம். சலுகை நிறுத்தம், தொழிலாளர் பிரச்சினை ஆகியவற்றால் பெரிய தொழிற்சாலைகள் வெளியேறியுள்ளன. இதனால் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது.
ஏற்கனவே புதுச்சேரியில் விவசாய தொழில் நலிவடைந்துள்ளது. கடந்த காலங்களில் 31,000 ஹெக்டராக இருந்த நிலம் தற்போது பத்தாயிரம் ஹெக்டராக சுருங்கியுள்ளது. இதனால் விவசாயிகளின் வேலைகளும் குறைந்துவிட்டது.
தொழிலதிபர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவ வேண்டும். தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் தொழில் வளர்ச்சி அடையும். இதை தொழிலதிபர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சேதராப்பட்டு கரசூரில் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.
இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.