புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 14வது முறையாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்கள் நலனை செயல்படுத்துவதில் சங்கடம் இருப்பதால் மாநில அந்தஸ்துதான் ஒரே தீர்வு என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று,புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ நேரு தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தனர்.இதற்கு அனைத்து கட்சி மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது: “இந்த சட்டப்பேரவையில் ஒரு மனதாக இவ்வளவு தெளிவாக அனைத்து எம்எல்ஏ-க்களும் பேசி பார்த்ததில்லை. அனைத்து கட்சி எம்எல்ஏக்கள்ம் பேசினர். அவ்வளவு வலி. அரசு தீர்மானமாக மத்திய அரசுக்கு கொண்டு சென்று மாநில அந்தஸ்து பெறுவோம். நல்ல நேரம் கூடி வந்துள்ளது. நல்லது நடக்கும். மாநில அந்தஸ்து கிடைக்கும். அந்த நேரம் வந்துள்ளது. அதனால் சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை அரசு தீர்மானமாக கொண்டு சென்று வலியுறுத்தி பெறுவோம். வெற்றியை பெறுவோம். எம்எல்ஏக்கள் அனைவரையும் அழைத்து சென்று பிரதமர், உள்துறை அமைச்ர் அமைச்சர்களை சந்தித்து பேசி இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்தை பெறுவோம்" என முதல்வர் நம்பிக்கை கூறினார். அதையடுத்து அனைத்து எம்எல்ஏக்களும் எழுந்து நின்று கைத்தட்டி வரவேற்றனர்.
இதையடுத்து, எதிர்க்கட்சியினர் தாங்கள் கொண்டு வந்த தீர்மானத்தை திரும்ப பெற்றவுடன், அத்தீர்மானம் அரசு தீர்மானமாக நிறைவேறுவதாக பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"