பாஜக கூட்டணி 150 தொகுதிக்கு மேல் வெற்றி பெறாது, அயோத்தி பால ராமர் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக உள்ளார் என புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினரும் காங். தலைவருமான வி.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மேல் படிப்பு படிக்க மாணவர்களும், பெற்றோரும் சான்றிதழுக்காக வருவாய்த்துறைக்கு அலைகின்றனர். உரிய நேரத்தில் சான்றிதழ் தராமல் இழுத்தடிக்கப் படுகிறார்கள். பணியாளர்கள் பற்றாக்குறையால் உடனே சான்றிதழை தரமுடியாத நிலையும் நிலவுகிறது.
சாதி சான்றிதழுக்காக இழுத்தடிப்பது கேள்விக்குறியாகவுள்ளது. முதல் அமைச்சர் இதை சரியாக கவனிக்கவில்லை.
போதைப் பொருள் இன்னும் விற்பனை நடக்கதான் செய்கிறது. முழுமையாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் இதுவரை பெரிய வியாபாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. போதைப் பொருள் விற்பனை சண்டையால் கொலைகளும் நடந்துள்ளன.
குழந்தை இறப்புக்கும் பிறகு அரசு விழிக்காமல் உறக்கத்தில்தான் உள்ளது. பள்ளி, கல்லூரி குழந்தைகளை காக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. போதைப்பொருள் பற்றி கவர்னரும், டிஜிபியும்தான் சொல்கிறார்கள். முதல் அமைச்சர், அமைச்சர்கள் வாய்திறக்கவே இல்லை.
யார் இதில் துணையாக உள்ளார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.
அரசு முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப்பொருள் நடமாட்டம் பற்றி காவல்துறைக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அவர்களது கையை கட்டிப்போட்டது யார் என்ற கேள்வி எழுகிறது.
மத்தியில் நாங்கள் ஆட்சியமைக்க உள்ளோம். பாஜக கூட்டணி 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது. அயோத்தி ராமர் கோயில் கட்டிய இடத்தில் இந்தியா கூட்டணிதான் வெல்லும். அயோத்தி பால ராமர் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக உள்ளார்.
நிச்சயம் ராமர், மோடியிடம் இல்லை என்று வைத்திலிங்கம் பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“