தீபாவளி சீட்டு நடத்தி வித விதமாக ஆபர்களை அறிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்து 80 லட்சம் ரூபாயுடன் பெண் தலைமறைவான சம்பவம் புதுச்சேரியில் நிகழ்ந்துள்ளது.
புதுச்சேரி அடுத்த தர்மாபுரியை சேர்ந்தவர் முனியம்மா என்கிற பிரபாவதி, இவர் புதுச்சேரி குருமாம்பட்டில் உள்ள சாய் சுப்ரீம் என்ற தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த தொழிற்சாலையில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 17 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த பொருளை வழங்கி நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த பிரபாவதி தனது மகன் காவல் துறையில் பணிபுரிந்து வருவதாகவும், தன்னை நம்பி பணம் கட்டுங்கள் என்று ஆசை வார்த்தை கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை சீட்டில் சேர்த்துள்ளார்.
மேலும் தள்ளுபடி விலையில் தங்கம், கொல்லிமலையிருந்து மளிகை பொருள், சில்வர், பித்தளை பாத்திரங்கள் என விதவிதமாக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பிரபாவதி சீட்டு நடத்தியுள்ளார்
இதை நம்பிய பெண் ஊழியர்கள் தனது உறவுக்காரர்கள், தெரிந்தவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என அனைவரையும் சீட்டில் சேர்த்துள்ளனர். ஆயிரம் ரூபாய் பணம் கட்டுபவர்களுக்கு இரண்டு கிராம் நகை, 25 கிராம் வெள்ளி, பித்தளை தவளை, 15 லிட்டர் மணிலா எண்ணெய், 25 கிலோ அரிசி மற்றும் இனிப்பு, காரம் பட்டாசு பாக்ஸ் என கவர்ச்சிகரமாக கூறி ஆயிரம் பேரை சீட்டில் சேர்த்தார்.
இவர்கள் கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் 2022 அக்டோபர் வரை பணம் கட்ட வேண்டும் என்று கூறி சீட்டு பதிந்துள்ளனர். ஆனால் தீபாவளி வருவதற்கு முன்பே ஆகஸ்ட் மாதமே முனியம்மா என்கிற பிரபாவதி 80 லட்சம் ரூபாயை சுருட்டிக்கொண்டு தலை மறைவாகிவிட்டார்
இந்த நிலையில் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் பிரபாவதி மகன் ராஜ பிரபு தனது அம்மாவை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் சீட்டுக்கட்டிய பெண்களுக்கு தெரிய வரவே அவரது வீட்டை முற்றுகையிட்டு கட்டிய பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.

அதற்கு எந்தவித பதிலும் இல்லாததால் பாதிக்கப்பட்ட பெண்கள், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு ஐந்து பேருக்கு மட்டும் காவலர்கள் அனுமதி அளித்த நிலையில், ஐ.ஜி சந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஐ.ஜி.சந்திரன் இதன் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும் போது; சீட்டு கட்டியவர்களுக்கு நியாயமாக பொருளை கொடுத்தார் என்ற நம்பிக்கையில் அவரிடம் தீபாவளி சீட்டு பணம் கட்டியதாகவும் ஆனால் தீபாவளி வருவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பே 80 லட்சம் ரூபாய் பணத்துடன் அவர் மாயமாகிவிட்டார். எனவே அவரை கண்டுபிடித்து எங்களுக்கு பணத்தை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பிரபாவதி ஆசை வார்த்தையை நம்பி நாங்க மட்டுமல்லாமல் எங்களது உறவுக்காரர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், எதிர் வீட்டுக்காரர்கள் என அனைவரையும் இந்த சீட்டு திட்டத்தில் சேர்த்துள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“