புதுச்சேரி மின்துறையில் கொண்டுவரப்பட்டுள்ள ப்ரீபெய்டு மின்கட்டண மீட்டர் முறைக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் தமிழக அரசை போன்று உறுதியான நிலைப்பாட்டை எடுத்து புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டுமென தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் வலியுறுத்தினர்.
புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள், தி.மு.க – காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தனியார் மயத்தின் ஒரு பகுதியாக மின்துறையில் கொண்டுவரப்பட உள்ள ப்ரீபெய்டு மின்கட்டண மீட்டர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படியுங்கள்: தி.மு.க கூட்டணியில் கமல்; அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் திருமா: பாண்டே கூறும் கணக்குகள்
இதனை தொடர்ந்து பூஜ்ய நேரத்தில் பேசிய தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், புதுச்சேரி மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தைப் போன்று புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பேசினார். இதே கோரிக்கையை தி.மு.க– காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தி பேசினார்.

பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை புதுச்சேரியில் சோதனை எலிகளாக பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். புதுச்சேரியில் ஏற்கனவே ரூபாய் 50 கோடி ரூபாய் அளவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. தற்போது புதுச்சேரியில் மின்துறை தனியாருக்கு கொடுக்கும் பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், மக்களை பாதிக்கும் வகையில் ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்தும் திட்டத்தை வன்மையாக கண்டித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.
இதேபோல் ஆன்லைன் சூதாட்டத்தை புதுச்சேரியில் தடை செய்ய வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் பேரவையில் வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வரை போல் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து, புதுச்சேரி சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil