பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நிறுத்திக் கொள்ள வேண்டுமென புதுச்சேரி திமுக எதிர்க்கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .
புதுச்சேரியின் மருத்துவ கேந்திரமாக, கர்ப்பக்கிரகமாக திகழ்ந்த ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் இயக்குநர் அகர்வால் அவர்களின் செயல்பாட்டால் இன்று குட்டிச்சுவராக்கப்பட்டு உள்ளது என்றும் இலவசமாக சிகிச்சை பெற்ற ஏழை நோயாளிகள் இன்று கட்டணம் என்று கூறி புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் கூறி திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த ஏப்ரல் 3–ஆம் தேதி போராட்டம் நடத்தியது. அப்போராட்டத்தில், வேலைவாய்ப்பில் புதுச்சேரிக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். சிகிச்சை பெற வருவோரின் வருமான உச்சவரம்பை அடியோடு நீக்க வேண்டும். அனைவருக்கும் தரமான மருத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும்.
ஏழை நோயாளிகளுக்கு எதிரான விரோதப் போக்கை கடைபிடிக்கும் ஜிப்மர் இயக்குநரையும் அவரது கூட்டாளிகளையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். செவிலியர் பணி வழங்கியதில் நடைபெற்ற ஊழல் முறைகேட்டை விசாரிக்க ஒன்றிய அரசு குழு அமைக்க வேண்டும். புதுச்சேரியில் நடைபெறும் அனைத்து விவகாரத்திலும் தலையிடும் ஆளுநர் அவர்கள் இந்த விவகாரத்தில் ஏன் தலையிடவில்லை என்றும் கேள்வி எழுப்பி இருந்தேன். நாங்கள் போராட்டம் நடத்தி ஒரு மாதம் ஆகியும் அதற்கு ஆளுநர் பதிலளிக்கவில்லை.
இந்நிலையில் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து, எங்கள் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நேற்றைய தினம் ஜிப்மர் மருத்துவமனை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். காலையில் போராட்டம் நடந்தவுடன் மதியம் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி எதிர்க்கட்சிகள் செய்யும் போராட்டத்தை துணைநிலை ஆளுநர் இருட்டடிப்பு செய்துள்ளார். தொடர்ந்து மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து கொண்டிருக்கும் பாஜக–வின் உண்மையான முகத்திரையை கிழித்து எறியும் போதெல்லாம் ஆளுநர் எங்கிருந்தாலும் ஓடி வந்து வக்காளத்து வாங்குவதையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், எம்.பி., அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர். அவர் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆளுநராக இருந்து கொண்டு அரசியல் பேசாமல் கோப்புகளுக்கு ஒப்புதல் பெறுவதை மட்டுமே வேலையாக வைத்திருக்கக் கூடிய ஒரு பதவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை பார்த்து உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது.
அதேபோல் அக்கட்சியின் விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களை தொகுதி வேலையை மட்டும் பார்க்கச் சொல்வதும், புதுச்சேரியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆளுநர் கூறுயிருப்பது அதிகாரத்தின் உச்சமாகவே பார்க்க முடிகிறது. ஆளுநரின் இந்த சர்வாதிகார பேச்சிற்கு புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அறிவித்துள்ள கேஸ் மானியத் திட்டம், பெண் குழந்தைகள் வைப்பு நிதி திட்டம், ஏழை, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் வழங்கும் திட்டம், பெண்கள் இலவச பேருந்து திட்டம் என எண்ணற்ற திட்டங்களுக்கு போதிய நிதி ஆதாரம் இருக்கிறதா, இத்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசிடம் புதுச்சேரி அரசு கோரியுள்ள நிதியைப் பெருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தோ துணைநிலை ஆளுநர் அவர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை.
அரசு அறிவித்துள்ள திட்டங்களை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் பதிலளிக்காத துணைநிலை ஆளுநர் அவர்கள், தொடர்ந்து அரசியல் பேசுவதும், எதிர்க்கட்சிகளை தனது அதிகாரத்தை பயன்படுத்தி வசைபாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இது புதுச்சேரி மாநிலத்திற்கு ஏற்றதல்ல. துணைநிலை ஆளுநர் அவர்கள் அரசியல் செய்வதை நிறுத்தவில்லை என்றால் அதற்கான விலைவுகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அரசு பெண் பணியாளர்களுக்கு இரண்டு மணி நேர சலுகை என்பது பெண்களை ஏமாற்றும் மாயத்திட்டமாகும்.
இந்தத் துறைகளுக்கு இந்த சலுகை கிடையாது என்று கூறி சுகாதாரம், கல்வி, காவல் என முக்கிய துறைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கு இந்த சலுகை கிடையாது என்று புதுச்சேரி அரசு தெரிவித்து இருக்கிறது. நேற்றைய தினம் இந்த சட்டம் நடைமுறையில் வந்த போதும் முறையான தெளிவான அறிவிப்புகள் இல்லாததால் வழக்கம் போல பல துறைகளில் பெண்கள் வேலைக்கு வந்திருக்கிறார்கள். சில துறைகளில் முன் அனுமதி பெற்று சிலர் மட்டும் இச்சலுகையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்க கூடிய இந்த சலுகை பெண்ணுரிமை என்ற போர்வையில் இரண்டு மூன்று பருக்கைகளை உண்டாலே பசியாறலாம் என்பதைப் போல உள்ளது. எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்க்கிறோம் என்று எதிர்க்கட்சிகளின் மீது வசை பாடும் ஆளுநர் தமிழிசை அவர்களுக்கு ஒன்றினை தெளிவுபடுத்த விரும்புகிறோம். மக்களுக்கான நல்ல திட்டங்களை வரவேற்பதில் ஒருபோதும் நாங்கள் தயக்கம் கொள்ள மாட்டோம். ஆனால் அதுவே மக்களுக்கு எதிரான காரியங்களை முன்னிறுத்தி கொண்டு வரக்கூடிய திட்டங்களை நிச்சயம் எதிர்ப்போம்.
இரண்டு மணி நேரம் சலுகை திட்டத்தை வெள்ளிக்கிழமையில் காலை என்றதையே திரும்பப்பெற்று வெள்ளிக்கிழமை மாலை தான் கோரிக்கை விடுத்தோம். ஆனால் பெண்களுக்கே எதிரானவர்களைப் போல எதிர்க்கட்சிகளை சித்தரிப்பது ஏற்புடையது அல்ல. ஆகவே, ஏழை, எளிய மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காகவும், அவர்களுக்கு ஜிப்மர் நிர்வாகம் தரமான இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் அக்கட்சியின் எம்.பி., குறித்து துணைநிலை ஆளுநர் தெரிவித்த கருத்தை திரும்ப பெற வேண்டும்.
எதிர்க்கட்சிகளை அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் ஒடுக்கிவிடலாம் என்று மனக்கணக்கு போடுவதை ஒருபோதும் திமுக அனுமதிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.