இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்களின் பட்டியலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ரூ.38.39 கோடிக்களுடன் 5-வது இடம் பிடித்துள்ளது குறித்து, புதுச்சேரி முன்னாள் எம்.பி. ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கோடீஸ்வர முதலவர்களின் பட்டியல் வெளியானது. இந்தியாவில் மொத்தம் உள்ள 30 மாநில முதல்வர்களில் 19 முதல்வர்கள் ரூ.5 கோடிக்கு மேல் சொத்துவைத்திருப்பது தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 510.38 கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
அருணாச்சல பிரதேசம் முதலமைச்சர் பெமா காண்டு ரூ.163 கோடியே 50 லட்சம் சொத்துக்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ரூ.63. 87 கோடிக்கு சொந்தக்காரராக உள்ளார். நாகலாந்து முதலமைச்சர் நைபியு ரியோ, ரூ.46.95 கோடிக்களுடன் நான்காம் இடத்திள் உள்ளார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ரூ.38.39 கோடிக்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.8.88 கோடி சொத்து மதிப்புடன் 14 வது இடத்தை பெற்றுள்ளார்.
இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் எம்.பி ராமதாஸ், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ரூ.38.39 கோடிகளுடன் 5-வது இடம் பிடித்திருப்பது குறித்து, விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் கோடீஸ்வர முதல்வர்களின் பட்டியலில் 5வது இடம் பிடித்த என்.ஆர். ரங்கசாமி, புதுவை காமராஜரா? என்று கேள்வி எழுப்பியுள்லார்.
புதுவை முன்னாள் எம்பி, பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு நாட்டின் முதலமைச்சர் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் புதுவை முதல அமைச்சர் ரூ.38.39 கோடி சொத்துடன் 5ம் இடம் பெற்றுள்ளார். தேசிய அளவில் முதலமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.33.96 கோடியாக உள்ளது.
தேசிய சராசரியை விட புதுவை முதல அமைச்சரின் சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த 2ஆண்டு சொத்து மதிப்பு இதில் ÷சேர்க்கவில்லை. கேரளா, மேற்குவங்கம், கர்நாடகம், குஜராத், ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், உத்திரபிரதேச முதல அமைச்சர்கள் எல்லாம் புதுவை முதல அமைச்சருக்கு பின்னால் உள்ளனர்.
தொழில்வளர்ச்சி, தொழில்நுட்பம், வேலைவாய்பு, வாழ்வாதாரம் போன்ற புதுவை மாநில வளர்ச்சியில் 5ம் இடம் பிடிக்க முடியவில்லை.
ஆனால் கோடீஸ்வர முதலமைச்சர் வரிசையில் புதுவை முதலமைச்சர் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி, பெருமை தரக்கூடியதாக உள்ளது. ரூ.38.39 கோடி சொத்து வைத்துள்ள முதல அமைச்சர் ரங்கசாமியை எளியவர், ஏழை பங்காளன், ஆன்மிகவாதி, புதுவை காமராஜர் என வர்ணிப்பது அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது.
அவரின் உண்மை நிலையை உணராமல் முரண்பாடாக வர்ணிக்கின்றனர். காமராஜரின் சொத்தாக கருதப்பட்டது ரூ.110, ஒரு ட்ரங்க் பாக்ஸ், 4 வேட்டி, சட்டைகள், ஒரு பேனா, 2 துண்டுகள், 2 காலணிகள்தான். இந்த கர்மவீரரோடு ரூ.38.39 கோடி சொத்துள்ள புதுவை முதல அமைச்சரை ஒப்பிடுவது சரியா என்பதை மக்கள்தான் கூற வேண்டும்.
புதுவை முதல அமைச்சர் இவ்வளவு சொத்தை எப்படி சேர்த்தார் என கேட்க வேண்டியதில்லை. அவர் புதுவைக்கு பணியாற்றி மேலும் சொத்துக்கள் சேர்த்து தனது வளர்ச்சியை இந்தியளவில் உயர்த்திக்கொள்ள வேண்டும் என வாழ்த்துகிறேன். தற்போதுள்ள தனியார்மய பாதையில் இதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறைந்த சொத்துக்களை வைத்துள்ள முதலமைச்சர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். அவரது சொத்து மதிப்பு ரூ.1.54 கோடி. மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் ரூ.1.47 கோடியையும், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் ரூ.1.27 கோடியையும் வைத்துள்ளார். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ரூ.1.18 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாவார். மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெறும் 15 லட்சம் மட்டுமே சொத்தாக வைத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.