புதுவையில் மீனவர்கள் சட்டமன்றம் முற்றுகை: முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு
புதுச்சேரி சன்னாசித்தோப்பு அங்காள பரமேஸ்வரி கோயில் மயான கொள்ளை நிகழ்வு நடைபெறும் நிலம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில் மீனவ கிராம மக்கள் இன்று சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி சன்னாசித்தோப்பு அங்காள பரமேஸ்வரி கோயில் மயான கொள்ளை நிகழ்வு நடைபெறும் நிலம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில் மீனவ கிராம மக்கள் இன்று சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி உப்பளம் வம்பாகீரப்பாளையம் சன்னாசித்தோப்பில் அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் ஆண்டுதோறும் மயான கொள்ளை விழாவை பிரம்மாண்டமாக நடத்துவார்கள். இங்கு 100 ஆண்டுக்கும் மேலாக கோவிலை சுற்றியுள்ள திடலில் மயான கொள்ளை நிகழ்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலம் என உரிமை கொண்டாடுவதாக கூறப்படுகிறது. இதனால் மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Advertisment
ஆண்டுதோறும் விழா நடத்தும் இடத்தில் இப்போது மட்டும் வந்து எப்படி உரிமை கொண்டாடுகிறார்கள்? எனக் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து இன்று முதலமைச்சரை சட்டசபையில் இன்று (ஏப்ரல் 19) சந்தித்து முறையிட உப்பளம் மின்துறை அலுவலகம் அருகே மக்கள் ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன் தலைமை வகித்தார். தகவலறிந்த தற்போதைய தொகுதி எம்.எல்.ஏ அனிபால் கென்னடி அங்கு வந்தார். மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் சட்டசபைக்கு வந்தார். அன்பழகன் தலைமையில் மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள், பொதுமக்கள் ஊர்வலமாக சட்டசபை நோக்கி வந்தனர். அவர்களை சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் அருகே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து தடுத்தனர். அப்போது பொதுமக்கள்- போலீசாரிடையே வாக்குவாதம் நடைபெற்றது. தொடர்ந்து போலீசார் தடுப்புகளை மீறி சட்டசபை நுழைவுவாயிலுக்கு வந்தனர். அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். முதலமைச்சர் ரங்கசாமியை சந்திக்க மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் சிலர் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும் என சபை காவலர்கள் தெரிவித்தனர்.
Advertisment
Advertisements
ரங்கசாமி உறுதி
இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் தலைமையில் மீனவ பஞ்சாயத்தார் முதல்வரை சந்தித்தனர். அப்போது சபாநாயகர் செல்வம், தொகுதி எம்எல்ஏ அனிபால்கென்னடி ஆகியோர் இருந்தனர். இதையடுத்து அன்பழகன், "வம்பாகீரப்பாளையம் சன்னாசித்தோப்பு மயான கொள்ளை விழா நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதுவரை அந்த நிலத்துக்கு யாரும் உரிமை கோரியதில்லை.
இந்த மயான கொள்ளை நடைபெறும் நிலத்தை 1922-ம் ஆண்டு பதிவு செய்ததை சுட்டிக்காட்டி, 4 பேர் பத்திரம் பதிந்துள்ளனர். இது தொடர்பாக ஆட்சியரை சந்தித்து புகார் அளித்துள்ளோம். இந்த நிலத்தை மீட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து தொடர்ந்து மயான கொள்ளை நடைபெற வழிசெய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளத்த முதல்வர் ரங்கசாமி, "நிலம் தனியாருக்கு சொந்தமானதாக இருந்தால், அதை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. தவறான பத்திரப்பதிவு செய்யப் பட்டுள்ளதா? என சார்பதிவாளர், நில அளவை பதிவேட்டுத்துறை இயக்குனர் மூலம் விசாரணை செய்வோம். அப்படி இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் " என்று உறுதி அளித்தார்.
அப்போது அன்பழகன் குறுக்கிட்டு, இதேபோல பிரெஞ்சு கால பத்திரங்களை சிலர் சுட்டிக்காட்டி பதிவு செய்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதற்கும் முதல்வர் ரங்கசாமி பத்திரம் தவறாக பதியப்பட்டிருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் எனக் கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil