புதுச்சேரியில் 3 மாத இடைவெளிக்கு பிறகு வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்க இருக்கிறது.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம் 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. பின்னர் போதிய வரவேற்பு இல்லாததால் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்தாண்டு அக்டோபரில் பெங்களூரு, மற்றும் ஐதராபாத்துக்கு மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவைகளையும் கடந்த 30ஆம் தேதியுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிறுத்தி கொண்டது.
இந்நிலையில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஐதராபாத், பெங்களூருவுக்கு இண்டிகோ நிறுவனம் விமானங்களை இயக்க இருக்கிறது. இதற்கான முன்பதிவு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதேபோல் ஏர் செபா நிறுவனம் புதுச்சேரியில் இருந்து சேலம், கோவைக்கு விமான சேவையை தொடங்க இருக்கிறது.இந்த புதிய சேவைகளுக்கு புதுச்சேரி விமான நிலைய அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.