கவர்னரை எதிர்த்துப் பேசினால் நாற்காலி காலியாகும் என்ற பயத்தில் முதல்வர் ரங்கசாமி மௌனமாக இருக்கிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஐந்து மாநில தேர்தலில் நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும். இது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக இருக்கும். இதன் மூலம் பாஜகவும், மோடியும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என கூறினார்.
புதுச்சேரியில் அனைத்து உத்தரவுகளையும் வெளியிட்டு சூப்பர் முதல்வராக கவர்னர் தமிழிசை செயல்படுகிறார். அவரை எதிர்த்து பேசினால் நாற்காலி காலியாகும் என்பதால் முதல்வர் ரங்கசாமி மௌனமாக இருக்கிறார் என நாராயணசாமி விமர்சித்தார்.
வில்லியனூர் பெண் காவலர் மரணத்தில் வில்லு போலீசாருக்கு தொடர்பு உள்ளது. இதனை மறைக்க கணவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக குற்றம் சாட்டிய நாராயணசாமி, காவல்துறை தலைவர் இந்த வழக்கை நேரடியாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்ற நாராயணசாமி, காலாப்பட்டு மருந்து தொழிற்சாலை விபத்து குறித்து முதலமைச்சர் இதுவரை வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். தொழிற்சாலைக்கு ஆதரவாக புதுவை அரசு செயல்படுவதாகவும், இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நாராயணசாமி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“